Pages

Thursday, November 4, 2010

முயல்கறி விற்பனை செய்யும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை

தீபாவளியை முன்னிட்டு முயல்கறி விற்பனை செய்யும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை மாவட்ட வன அதிகாரி எச்சரிக்கை

திண்டுக்கல்,நவ4-
http://dailythanthi.com/article.asp?NewsID=604844&disdate=11/4/2010&advt=2

தீபாவளியை முன்னிட்டு காட்டு முயல்கறி விற்பனை செய்யும் ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அதிகாரி தங்கராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முயல் கறி விற்பனை
`தீபாவளி` என்றாலே பட்டாசு, பலகாரம் மட்டுமல்லாமல் மாமிச விருந்தும் முக்கிய இடத்தை பிடிக்கும். இதனால் ஆட்டிறைச்சி, கோழிக்கறி ஆகியவற்றின் விலை கடந்த சில தினங்களாகவே ஏறுமுகமாக இருந்து வருகிறது.

இதைத்தவிர ஒவ்வொரு ஓட்டல்களிலும் `தீபாவளி ஸ்பெஷல்` என்ற பெயரில் மாமிச உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒரு சில ஓட்டல்களில் தீபாவளியை முன்னிட்டு வான்கோழி பிரியாணி, முயல்கறி, காடை, கவுதாரி ஆகியவை கிடைக்கும் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் முயல், காடை, கவுதாரி ஆகியவற்றை கொல்வதோ, மாமிசத்தை விற்பனை செய்வதோ 1972-ம் ஆண்டு வன உயிரின சட்டப்படி குற்றமாகும். எனவே இவைகளின் மாமிசத்தை விற்பனை செய்யும் ஓட்டல் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் தங்கராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஓட்டல்களில் சோதனை

இது தொடர்பாக வன அலுவலர் தங்கராஜு கூறியதாவது:-
முயல்கள், காடை, கவுதாரி ஆகியவை இயற்கையாகவே வனப்பகுதியில் வாழக்கூடியவை ஆகும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில், இவைகளின் மாமிச விற்பனையை கண்காணிக்க வனச்சரகர்கள் பத்மநாபன், பெரியசாமி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனிப்படையினர் ஓட்டல்களில் அவ்வப்போது சோதனை மேற்கொள்வார்கள். அப்போது ஒட்டல்களில் முயல், காடை, கவுதாரி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது, வன உயிரினச் சட்டப்படி, 3 ஆண்டு சிறை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

ஆனால் வளர்ப்பு முயல், ஜப்பான் காடை ஆகியவற்றின் மாமிசம் விற்பனை செய்வதற்கு தடை கிடையாது. இதேபோல் தீ விபத்தை தவிர்க்கும் வகையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் பட்டாசு கொளுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அந்தந்த வனச்சரகர்கள் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு மாவட்ட வன அலுவலர் தங்கராஜு பேசினார்.