Pages

Friday, November 5, 2010

கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி குட்டிகள்

குடியாத்தம் அருகே 100 அடி கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றி குட்டிகள்
2 மணி நேரம் போராடி மீட்கப்பட்டன

குடியாத்தம், நவ.5-
http://dailythanthi.com/article.asp?NewsID=605237&disdate=11/5/2010&advt=2

குடியாத்தம் அருகே காட்டுப்பன்றி குட்டிகள் 100 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டன. அவற்றை வனத்துறையினரும், தீயணைக்கும் படையினரும் சுமார் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

கிணற்றில் விழுந்த குட்டிகள்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கல்லபாடி காப்பு காடுகள் பகுதியான காந்திநகரை அடுத்த கல்லேரி, ஈஸ்வரன்குட்டை என்ற இடத்தில் தனியார் நிலத்தில் 100 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணறு உள்ளது. நேற்று முன்தினம் மாலை காட்டுப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றி கூட்டம் ஒன்று அந்த வழியாக வந்தது. அதில் தாய் பன்றியுடன் 8 குட்டிகள் இருந்தன.

கடலை தோட்டத்திற்கு மேய வந்தபோது குட்டிப்பன்றிகள் தவறி அந்த பாழடைந்த கிணற்றில் விழுந்து விட்டன. தாய் பன்றி தன் குட்டிகள் கிணற்றில் விழுந்ததை கண்டு துடி துடித்தது. குட்டிகளை காப்பாற்ற வழியின்றி, அலறியவாறே கிணற்றை சுற்றி சுற்றி வந்தது.

மீட்பு பணி
அந்த சத்தம் கேட்ட விவசாயிகள் விரைந்து வந்து பார்த்தபோது பன்றிக்குட்டிகள் கிணற்றில் விழுந்து இருப்பது தெரியவந்தது. உடனே, அதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறை ஊழியர்கள் வந்து பார்த்தபோது இருட்டி விட்டதால் கிணற்றுக்குள் இருந்து சத்தம் மட்டும் கேட்டது- எதுவும் தெரியவில்லை. வனச்சரக அலுவலர் மகேந்திரன் குட்டிகளை உயிருடன் மீட்கும் முயற்சியாக கிணற்றிக்குள் காய்கறிகள், பழங்களை போட்டார். இரவு முழுவதும் தாய் பன்றி கிணற்றை சுற்றி சத்தம் போட்டவாறு இருந்தது. நேற்று காலையில் வன காவலர் முருகேசன், வன காப்பாளர்கள் சேட்டு, ராஜேந்திரன், குப்பன் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி, முன்னனி தீயணைப்பு வீரர்கள் சேகரன், கேசவன் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

2 மணி நேரம் போராடி மீட்பு
ஏணி மற்றும் கயிறு வழியாக வனத்துறை ஊழியர் சிவலிங்கம், தீயணைப்பு வீரர் பாஸ்கரன் ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கினர். சுமார் 2 மணி நேரம் போராடி காட்டுப்பன்றி குட்டிகளை ஒவ்வொன்றாக பிடித்து, கோணிப்பையில் அடைத்தனர். பின்னர் அவற்றை உயிருடன் மேலே கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட பன்றிக்குட்டிகள் அனைத்தும் காட்டிற்குள் அவிழ்த்து விடப்பட்டன. தூரத்தில் நின்றபடி மீட்பு பணியை பார்த்துக்கொண்டு இருந்த தாய் பன்றி, தனது குட்டிகள் விடுவிக்கப்பட்டவுடன், அவற்றை அழைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் காட்டிற்குள் ஓடி மறைந்தது.