Pages

Tuesday, July 17, 2012

மயில் இறகு விற்ற மூவர் கைது


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=494574
பதிவு செய்த நாள் : ஜூன் 26,2012,02:32 IST

சென்னை: சென்னையில், மயில் இறகு விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை, வனத்துறையினர் பிடித்தனர். அவர்களிடம் இருந்த, மயில் இறகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில், தி.நகர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில், மயில் இறகுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதுகுறித்து, வனத்துறைக்குப் புகார் வந்தது. வேளச்சேரி தலைமையிட வனச்சரகர் டேவிட்ராஜ் தலைமையில், வனக்காப்பாளர் கெஜபதி மற்றும் வன ஊழியர்கள், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மயில் இறகுகளை விற்பனை செய்த மூன்று நபர்கள் கையும் களவுமாகச் சிக்கினர். விசாரணையில், அவர்கள் ஆக்ராவைச் சேர்ந்த நவல்சிங்,24, ஜிஜேந்தர்,25, மற்றும் பவன்,20, என்பது தெரிந்தது. அவர்கள், ஆக்ராவில் உள்ள இறகுகள் விற்பனையகத்தில் இருந்து கொள்முதல் செய்துவந்து விற்பனை செய்வதாகத் தெரிவித்தனர். இருப்பினும், கைப்பற்றப்பட்ட மயில் இறகுகள், உதிர்ந்தவையா அல்லது மயில்களின் உடலில் இருந்து பிடுங்கப்பட்டவையா என்பதை உறுதி செய்யும் வகையில், ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வேளச்சேரி தலைமையிட வனச்சரகர் டேவிட்ராஜ் கூறுகையில், ""மயில் தேசியச் சின்னம் என்பதால், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டப்படி, பாதுகாக்கப்பட்டு வரும் பறவையினம். அதைத் துன்புறுத்துவது, கொல்வது, வளர்ப்பது சட்டப்படி குற்றம். தமிழகத்தை பொறுத்தவரை, வன உயிரின பொருட்களை விற்பனை செய்வதற்கும், வைத்துக் கொள்வதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை,'' என்றார்

முயல் வேட்டையாடிய 12 பேருக்கு அபராதம்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=494595
பதிவு செய்த நாள் : ஜூன் 26,2012,02:35 IST

ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி அருகே முயல் வேட்டையாடிய 12 பேர் பிடிபட்டனர்.

ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள நரிப்பொத்தை மலைப்பகுதியில் வெளியூரில் உள்ள நபர்கள் சிலர் தொடர்ந்து முயல் வேட்டையாடுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் சஞ்சய் ஸ்ரீவத்சவா மற்றும் கள இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.

முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ராஜேஷ் வஜீஸ், கவுதம்டே ஆகியோர் உத்தரவின்பேரில் உதவி வன பாதுகாவலர் ஆனந்தகுமார், வனவர் சிவக்குமார் மற்றும் வனக்காப்பாளர்கள் ரத்னவேல், ஆறுமுகம், வேட்டை தடுப்பு காவலர்கள் முத்துக்குமார், வேல்சாமி, சத்தியமுருகன், ரமேஷ்பாபு, வனக்காப்பாளர் பரமசிவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு முயல் வேட்டையாடிக் கொண்டிருந்த மதுரை அருகேயுள்ள தாழ்வார்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமி, சின்னமன்னன், செல்வம், கருப்பண்ணன், ராஜேந்திரன் உட்பட 11 பேர் மற்றும் இவர்களுக்கு உதவியாக இருந்த வாகைக்குளம் சைலப்பன் ஆகிய 12 பேரையும் மடக்கி பிடித்தனர். இவர்களிடம் இருந்து முயல்கள் மற்றும் வேட்டைக்கு பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு 1 லட்சத்து 60 ஆயிரத்து 440 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.