Pages

Wednesday, November 10, 2010

மரநாய் குட்டிகள்

ஈரோடு அருகே தென்னை மரத்தில் இருந்த மரநாய் குட்டிகள் பிடிபட்டன

ஈரோடு, நவ. 10-
http://dailythanthi.com/article.asp?NewsID=606029&disdate=11/10/2010&advt=2

ஈரோடு அருகே தென்னை மரத்தில் இருந்து பிடிபட்ட மரநாய் குட்டிகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தென்னை மரத்தில் அதிசய விலங்கு
ஈரோடு மாவட்டம் பாசூரை அடுத்து உள்ளது பழனிக்கவுண்டன்பாளையம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராசுமணி. விவசாயி. இவருக்கு சொந்தமான தென்னை மரங்கள் காலிங்கராயன் வாய்க்கால் ஓரத்தில் உள்ளன. நேற்று காலை இந்த தென்னை மரங்களில் இருந்து தேங்காய்களை பறிப்பதற்காக மரம் ஏறும் தொழிலாளி மணியுடன், ராசுமணி சென்றார்.

2 தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களை பறித்து மணி கீழே போட்டார். 3-வதாக ஒரு மரத்தில் ஏறினார். அந்த தென்னை மரத்தில் இருந்த காய்ந்த மட்டையை இழுத்து வெளியே போட்டார். அப்போது மட்டைகளுக்கு இடையே இருந்து ஒரு வித்தியாசமான விலங்கு துள்ளிக்குதித்து தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்தது.

3 குட்டிகள்
அது என்ன விலங்கு என்ற ïகிக்கும் முன்பே காலிங்கராயன் வாய்க்கால் கரையில் உள்ள புதர்களுக்கிடையே ஓடிச் சென்று அது மறைந்து கொண்டது. ஒரு பெரிய பூனை அளவு இருந்த அந்த விலங்கை பார்த்ததும் மரம் ஏறும் தொழிலாளி மணி அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் மரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர், தென்னை மட்டைகளுக்கு இடையே பார்த்தார். அங்கு அணில் குஞ்சுகள் போல 3 விலங்கு குட்டிகள் இருந்தன. அவற்றை மணி பத்திரமாக எடுத்தார். அப்போது ஒரு குட்டி தவறி கீழே விழுந்தது. கீழே விழுந்த குட்டியின் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. கீழே விழுந்த குட்டியை ராசுமணி கையில் எடுத்துக்கொண்டார். மற்ற 2 குட்டிகளையும் மரத்தில் இருந்த மணி பத்திரமாக கையில் தாங்கி பிடித்தபடி மெதுவாக கீழே கொண்டு வந்தார்.

பிறகு அவர்கள் அந்த 3 குட்டிகளையும் அருகில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்துக்கு கொண்டு வந்தனர். அந்த குட்டிகள் அணில் குஞ்சுகள் போன்று மிகவும் அழகாக இருந்தன. அந்த பகுதி கிராம மக்கள் அவற்றை பார்க்க ஆர்வத்துடன் அங்கே திரண்டார்கள்.

பால்-பழம்
ஒரு சிலர் இது அரிய வகை புனுகு பூனைகளாக இருக்கும் என்றும், இவை வேறு ஏதோ வகையான விலங்குகள் என்றும் ஒவ்வொரு பெயராக கூறி ஆர்வத்துடன் பார்த்தனர். பால் மணம் மாறாத அந்த சிறு குட்டிகள் மக்களை பார்த்து மிரண்டு போய் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருந்தன. குட்டிகள் என்பதால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பாலை கொண்டு வந்து ஊட்டினார்கள்.

ஆனால், அந்த குட்டிகள் பாலை குடிக்கவில்லை. சிலர் வாழைப்பழத்தை கொண்டு வந்து பிசைந்து கொடுத்தனர். அதை 3 குட்டிகளும் சிறிதளவு சாப்பிட்டன. ஆனால் சிறிது நேரத்தில் அவை சோர்வடைந்து அங்கேயே படுத்து விட்டன.

மரநாய் குட்டிகள்
இதற்கிடையே வித்தியாசமான விலங்கு குட்டிகள் கிடைத்து இருப்பது குறித்து அறச்சலூர் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல்கள் கிடைத்தன. வன அதிகாரி அருள் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த குட்டிகளை பார்வையிட்டனர். அப்போது அவை அரிய வகை விலங்கான மரநாய் குட்டிகள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அந்த குட்டிகள் மிகவும் சோர்வு அடைந்து இருந்ததால் அவற்றை மீட்டு அறச்சலூரில் உள்ள கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு பின்னர் 3 மரநாய் குட்டிகளையும் அறச்சலூர் நாகமலையில் கொண்டு விடப்படும் என்று வனத்துறையினர் கூறினார்கள்.