Pages

Saturday, November 20, 2010

வனவிலங்குகளை தடுக்க அகழிகள்

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் யானைகள், ஊருக்குள் புகுந்த இடங்களை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டார் வனவிலங்குகளை தடுக்க அகழிகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

புஞ்சைபுளியம்பட்டி, நவ.21-
http://dailythanthi.com/article.asp?NewsID=608556&disdate=11/21/2010&advt=2

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் யானைகள், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த இடங்களை வனத்துறை அமைச்சர் செல்வராஜ் நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் வன விலங்குகள் கிராமப்பகுதிக்குள் நுழைவதை தடுக்க அகழிகள் அமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சர் பார்வையிட்டார்
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை அடுத்த பனையம்பள்ளி, உயிலம்பாளையம், பெரிய கள்ளிப்பட்டி, கோடேபாளையம் ஆகிய வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் யானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்தது. மேலும் அந்தப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து தென்னை, வாழை, சோளம், கரும்பு ஆகிய பயிர்களை நாசம் செய்து வந்தன. யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்கவும், விவசாய பயிர்கள் சேதமாவதை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் நேற்று மாலை ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டிக்கு வந்தார். பிறகு அமைச்சர் உயிலம்பாளையம், கள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்றார். வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் நுழையும் இடங்களை வரைபடத்தின் மூலம் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டுத்தெரிந்து கொண்டார். அந்த பகுதியில் யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த இடங்களையும், யானைகள் சேதப்படுத்திய சோளம், கரும்பு தோட்ட பயிர்களையும் நேரில் பார்வையிட்டார். யானைகள் துதிக்கையால் சாய்த்து சேதப்படுத்திய தென்னை மரங்களையும் பார்வையிட்டார்.

கோரிக்கை மனு
உயிலம்பாளையத்துக்கு அமைச்சர் வந்தபோது அந்தப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கிராம மக்கள் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றினை கொடுத்தனர். அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதையும், தோட்டத்துக்குள் நுழைந்து விவசாய பயிர்களை நாசம் செய்வதையும் தடுக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்ட விவசாய பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் செல்வராஜ் இதுபற்றி கூறும்போது, பிபி யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க பெரியகள்ளிப்பட்டியில் இருந்து பவானிசாகர் போலீஸ் குடியிருப்புவரை வனப்பகுதியையொட்டி தற்போது சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இனி அதனை அகற்றி அகழி வெட்டப்படும். இதன்மூலம் யானைகள் ஊருக்குள் புகுவதையும், விவசாய தோட்டத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதையும் தடுக்க முடியும்பிபி என்றார்.

அகழிகள் அமைக்க உத்தரவு
பிறகு அமைச்சர், யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க சோலார் மின்வேலிக்கு பதில் அகழிகள் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சருடன் ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் அருண், சத்தியமங்கலம் வனமாவட்ட அதிகாரி சதீஸ், பவானிசாகர் ஓ.சுப்பிரமணியம் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் வி.பி.சுப்பிரமணியம், பெரிகள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி, பனையம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.