பிளிகிரி ரங்கனபெட்டா புலிகள் சரணாலயத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
மந்திரி விஜயசங்கர் தகவல்
மந்திரி விஜயசங்கர் தகவல்
பெங்களூர், நவ.13-
http://dailythanthi.com/article.asp?NewsID=606661&disdate=11/13/2010&advt=2
கர்நாடகத்தில் பிளிகிரி ரங்கனபெட்டா புலிகள் சரணாலயம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்து விட்டதால்,இந்த சரணாலயம் விரைவில் தொடங்கப்படும் என்று மந்திரி விஜயசங்கர் தெரிவித்தார்.
வனவீரர் தினம்
சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனால் கொல்லப்பட்ட வன அதிகாரி சீனிவாஸ் நினைவாக கர்நாடகத்தில் வன வீரர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வனவீரர் தினம் நேற்று முன்தினம் பெங்களூர் மல்லேசுவரம் பகுதியில் உள்ள வன பவனில் நடந்தது. இதில் வனத்துறை மந்திரி விஜயசங்கர் கலந்து கொண்டு வனவீரர் நினைவு சின்னத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மந்திரி விஜயசங்கர் பேசியதாவது:-
வனவளம் நாட்டின் மிகப்பெரிய சொத்தாக விளங்குகிறது. இதை பாதுகாப்பது அரசின் கடமை மட்டும் அல்ல. இதில் பொதுமக்களின் பங்களிப்பும் தேவை. வனத்துறையில் பணி செய்து வீரமரணம் அடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வனவீரர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வீரமரணம் அடைந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
புலிகள் சரணாலயம்
கர்நாடகத்தில் வனத்துறையின் கீழ் 5 தேசிய பூங்காக்களும், 22 வனஉயிர் சரணாலயங்களும் உள்ளன. இவற்றில் 4 புலிகள் சரணாலயமும் அடங்கும். பிளிகிரி ரங்கனபெட்டா புலிகள் சரணாலயம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த சரணாலயம் விரைவில் தொடங்கப்படும்.
வனத்துறையில் காலியிடங்களை அரசு நிரப்பி வருகிறது. இந்த நிலையில் 125 வட்டார வன அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளது. அந்த காலியிடங்களை நிரப்ப அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளது.இவ்வாறு மந்திரி விஜயசங்கர் பேசினார்.