பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2010,23:06 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=119631
தமிழகத்தில் ஆடுகளுக்கு ஏற்பட்டுள்ள, தட்டுப்பாடு காரணமாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து, ஆடுகளை வாங்கி வர வேண்டிய நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது, ஆடுகள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. தமிழக கால்நடைத் துறையினரின் கணக்குபடி மொத்தம் 55.94 லட்சம் செம்மறி ஆடுகளும், 81.77 லட்சம் வெள்ளாடுகளும் வளர்க்கப்படுவதாக தெரிய வந்தது.
ஆடு வளர்ப்பில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தையும், திருநெல்வேலி, சேலம் மாவட்டம் இரண்டு, மூன்றாம் இடங்களை பெற்றுள்ளது. இந்த மாவட்டங்களை தொடர்ந்து தூத்துக்குடி,சிவகங்கை என பத்து மாவட்டங்களில் ஆடு வளர்ப்பு தொழில் நடந்து வருகிறது.
தமிழகத்தில் கொடி கட்டி பறக்க துவங்கிய ரியல் எஸ்டேட் தொழில் காரணமாக மேய்ச்சல் நிலம், விளை நிலங்களும் வீடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஆடு வளர்ப்புக்கான மேய்ச்சல் இடங்களின் பரப்பு வெகுவாக குறைந்து விட்டதால், இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் மாற்று தொழிலுக்கு செல்ல துவங்கி விட்டனர்.
தமிழகத்தின் பெரிய ஆட்டுச் சந்தைகளான மேச்சேரி, மோர்பாளையம், திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆத்தூர், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரி, மணியாச்சி ஆகிய இடங்களில் விற்பனைக்கு வரும் ஆடுகளின் வரத்தில் 75 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆட்டுக் கறியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் விற்பனைக்கு குறைந்த அளவில் ஆடுகள் வருவதால், ஆடு விலை உயர்ந்துள்ளது. ஆடு விலையில் ஏற்பட்டுள்ள உயர்வு கறியில் எதிரொலிக்கிறது. ஆடுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், தமிழக வியாபாரிகள் தற்போது ஆந்திர மாநிலத்துக்கு ஆடுகளை வாங்க படையெடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா, ராஜமுந்திரி ஆகிய பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கி வந்து, விற்பனை செய்ய துவங்கி உள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக ஆடு விலையில் உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் வாங்கும் ஆடுகளுக்கு போக்குவரத்து செலவுக்காக பெரும் தொகையை வியாபாரிகள் செலவு செய்கின்றனர்.
சேலம், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் ஆட்டுக்கறியின் சராசரி விலை கிலோ 250 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டாலும், தீபாவளிக்கு முன்னரே சில இடங்களில் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆடுகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, மவுசு அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளதால், தீபாவளி பண்டிகை நாட்களை தொடர்ந்து ஆட்டுக்கறியின் விலை கிலோ 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை உயரம் என, வியாபாரிகள் கூறுகின்றனர்.