உசிலம்பட்டி, நவ.16-
http://dailythanthi.com/article.asp?NewsID=607392&disdate=11/16/2010&advt=2
உசிலம்பட்டி பகுதியில் மலைப்பாம்பு உள்பட விஷத்தன்மை கொண்ட பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன.
வனப்பகுதியில் விடப்பட்டன
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நேதாஜி பாம்புகள் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக ரமேஷ் என்பவர் இருந்து வருகிறார். இவர் பாம்புகளை பிடித்து விஷத்தன்மை குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறார். உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வயல் மற்றும் கிராமங்களில் சுற்றித்திரியும் பாம்புகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து வருகிறார். ஆண்டுதோறும் இவர் மழைக்காலங்களில் இந்த பகுதியில் சுற்றித்திரியும் பாம்புகளை பிடித்து வனத்துறையில் ஒப்படைப்பது வழக்கம்.
இதுபோல் இந்த ஆண்டு உசிலம்பட்டி பகுதியில் திரிந்த பாம்புகளை ரமேஷ் பிடிக்க திட்டமிட்டார். இதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது மலைப்பாம்பு, நாகம், கண்ணாடி விரியன், சாரைப்பாம்பு ஆகிய 4 பாம்புகளை பிடித்து அவற்றுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.இதன்பின் உசிலம்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி மலைப்பகுதியில் வனச்சரகர் சந்திரசேகரன் மற்றும் வனக்காப்பாளர்கள் உதவியுடன் பாம்புகள் விடப்பட்டன. அங்கு அந்த பாம்புகள் துள்ளிக்குதித்து ஓடின.
பாம்புகள் படையெடுப்பு ஏன்?
உசிலம்பட்டி பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு 67பேரை பாம்பு கடித்தது. 2009-ம் ஆண்டில் 139 பேரை பாம்பு கடித்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இப்படி பாம்பு கடித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ``விளைநிலங்கள் மற்றும் தோப்புகளை வீடுகளாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றி வருகின்றனர். இதுதவிர வனப்பகுதியிலும் மனிதர்கள் ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுவதால் அங்கு தங்குவதற்கு வழியின்றி விஷத்தன்மை கொண்ட பாம்புகள் அவற்றை விட்டு வெளியேறி கிராமங்களில் புகுந்து பொதுமக்களை கடித்து வருகின்றன. இதுவே பாம்பு கடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம்'' என்று நேதாஜி பாம்புகள் அறக்கட்டளை இயக்குனர் ரமேஷ் தெரிவித்தார்.