Pages

Wednesday, November 3, 2010

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பறவைகள் காப்பாற்றப்படுமா?

பதிவு செய்த நாள் : நவம்பர் 02,2010,23:13 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=119092
 
 
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் மூலம், மனித இனத்திற்கு இயற்கையாகவே உதவி வந்த பறவையினங்களில் சில அழிந்து விட்டதோ என்ற அச்சமும், மேலும் சில அழிந்து வருகிறதோ என்ற கவலையும் இயற்கை ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துள்ளது. அவர்களின் அவசர வாழ்க்கை முறைகளால், மனித இனத்தின், "ஆயுள்' குறையும் வகையில் சுற்றுச்சூழல் பாதிப்பும் கவலை அளிக்கும் வகையில் மலிந்து விட்டது.மழையை அதிகரித்து, "மாசு' கட்டுப்படுத்தும் இயற்கையின், "கொடையான' மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு, விண்ணை முட்டும் "கான்கிரீட் காடுகள்' உருவாக்கப்படுகின்றன.இவற்றின் தேவைக்காக மின்சாரம், தண்ணீர் ஆகியவை அதிகபட்ச அளவில் செலவழிக்கப்படுகிறது. இது தவிர, மனிதர்களின் ஆடம்பரத்திற்காக பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களின் கழிவுகளால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடு, மீண்டும் மனித வாழ்வை சேதப்படுத்துகிறது.இன்று சுகாதார பாதுகாப்பிற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாய்கள் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குளங்கள் சீரமைப்பு, குப்பை கழிவுகள் அகற்றம் என, பல்வேறு சுகாதாரப் பணிகள் சட்டரீதியாக செயல்படுத்தப்படுகின்றன.ஆனால், அவற்றை எல்லாம் மீறி உருவாகும் டெங்கு, சிக்-குன்-குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற பல புதுப்புது தொற்று நோய்களால் மனித இனம்  பாதிக்கப்படுகிறது.

வல்லூறுகள்: சுற்றுச்சூழலின் பாதுகாவலனாக நமக்கு கிடைத்த, பறவையினங்கள் அழிக்கப்பட்டும், அழிந்தும் வருவதே அதற்கு காரணம் என்பதை நாம் உணருவதில்லை. தொற்று நோய் பரப்பும் இறைச்சிக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளர்களாக இருந்த, "ஸ்கேவஞ்சர் வல்சர்' மற்றும் "பிணம் தின்னி கழுகுகள்' என்று அழைக்கப்படும் வல்லூறுகள் முற்றிலுமாக அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.காடு, வயல் வெளி மற்றும் பரந்து விரிந்த குப்பை மேடு உள்ளிட்ட திறந்த வெளிகளில் இறந்தும், அழுகிய நிலையிலும் கிடக்கும் எலி முதல் மாடுகள் வரையிலான விலங்கினங்கள் மற்றும் நீர் நிலைகளில் சிதைந்துள்ள மனித உடல் முதலான அனைத்து வகை இறைச்சிக் கழிவுகளையும் அகற்றும், வல்லூறுகளை இன்று காண முடிவதில்லை.சுத்தமான நீர் நிலை உள்ளிட்ட பல பகுதிகளில் எதிர்பாராமல் கிடக்கும் இறைச்சிக் கழிவுகளை, மனிதன் நேரில் சென்று அகற்ற முடியாத நிலையில், வல்லூறுகள் அகற்றி மனிதனுக்கு உதவின.தற்போது இவைகளை கிராமப்பகுதிகளில் கூட காண்பதும் அரிதாகிவிட்டது. பறவைகள் சரணாலயங்களில் கூட வல்லூறுகளை காண முடியாத நிலை  ஏற்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

காகம்:வல்லூறுகளுக்கு அடுத்ததாக சுற்றுச்சூழல் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளிகளாக காகங்கள் உள்ளன. இவற்றுக்கு "வானத் தோட்டி' என்ற செல்லப்பெயரும் உண்டு. கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட  சுகாதார கட்டமைப்புகள் இல்லாத கடந்த காலங்களில் வல்லூறு மற்றும் காகத்தின் துப்புரவுப் பணிகள் மூலம், மனித இனத்தின் சுகாதார நலன் மறைமுகமாக பாதுகாக்கப்பட்டது.ஆனால் இன்று மரங்கள், காடுகள் அழிக்கப்பட்டு பிரமாண்ட கட்டடங்கள், பாலங்கள், சாலைகள் ஆகியவை உருவாகி வரும் நிலையில், பறவையினங்களின் தங்கும் இடம், இனப்பெருக்க சூழலுக்கான அடிப்படை வசதிகள் பறிக்கப்பட்டன.  அந்த வகையில் மனிதனுக்கு உதவிய பறவையினங்களும் மெதுவாக அழிந்து வருகின்றன.

கிராமங்களில் குப்பைகளை கிளறி, சிறு பூச்சி போன்ற உணவை உட்கொண்டு சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்தும் நாட்டு கோழி இனங்கள் கூட குறைந்து ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இவை மருத்துவ ரீதியாக மனிதனுக்கு சத்தான உணவாக பயன்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆனால், இன்று இயந்திரங்கள் மூலம், "அடை' காக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் பண்ணை கோழிகள் மனிதனின் அவசரத் தேவைக்கான, "ஆரோக்கியமற்ற' உணவாக மாறி விட்டது.

பறவைகளை காக்க...   : தினமும் காலையில், சனி பகவானின் வாகனம் என்ற ஆன்மிக நம்பிக்கையில் காக்கைகளுக்கு, "சோறு' வைத்த பின்பே, உணவு உண்ணும் பழக்கத்தை நம்மவர்கள் கொண்டுள்ளனர். ஆனால் இன்று அழிந்து வரும் காக்கை இனத்தை காக்க, யாரும் அக்கறை கொள்வதில்லை. காக்கைகளை செல்லப் பறவையாக வளர்க்க முடியாது.ஆனால், மரங்களை வெட்டாமல் இருப்பதன் மூலம் அவற்றுக்கான தங்குமிடம் போன்ற உதவியை நம்மால் செய்ய முடியும். மனிதனுக்கு உதவும் அற்புத பறவையினங்கள், இன்னும் பத்தாண்டுகளுக்கு பின் இல்லாமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக பறவை இன ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.எனவே, "இயற்கையை காக்க இயன்றதைச் செய்வோம்...!' என்ற உறுதி ஏற்று பறவைகளுக்கு உதவும், "மனித நேயத்தை' வளர்த்துக் கொள்வது, மனித இனத்தின் எதிர்கால சந்ததிக்கு நாம் செய்யும் உதவியாகும்.