Pages

Friday, November 26, 2010

பாம்புகளுடன் விளையாடும் குடும்பம்

பாம்பை கண்டு பயப்படாத பாரதபுரம் மக்கள்: பாம்புகளுடன் விளையாடும் குடும்பம்

பதிவு செய்த நாள் : நவம்பர் 26,2010,00:14 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=133756

செங்கல்பட்டு : பாம்பு என்றால் படையும் நடுங்கும். ஆனால் பாரதபுரம் மக்களோ பாம்புகளைக் கண்டு பயப்படுவதில்லை. காரணம் அங்கு வசிக்கும் முத்துஷா குடும்பத்தினருக்கு பாம்புகளுடன் விளையாடுவது பொழுதுபோக்கு.

செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது பாரதபுரம் கிராமம். இங்குள்ள மக்கள் மற்ற பகுதி மக்களைப் போல் துவக்கத்தில் பாம்பு என்றால் அலறி அடித்து ஓடினர். முத்துஷா என்பவரின் வருகைக்கு பின் அவர்களுக்கு பாம்பின் மீதிருந்த பயம் மாயமானது. பாம்புகளுடன் விளையாடத் துவங்கினர். பாரதபுரம் கிராமத்தில் வசிப்பவர் முத்துஷா (50). விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது மாமா பாம்புகளை வளர்த்து வந்துள்ளார். சிறு வயதிலிருந்தே பாம்புகளை பிடிப்பதில் முத்துஷாவிற்கு ஆர்வம் அதிகம். 30 ஆண்டுகளுக்கு முன்பு தொழுநோயால் பாதிக்கப்பட்டார். செங்கல்பட்டு அடுத்த திருமணியில் உள்ள மத்திய தொழுநோய் ஆராய்ச்சி மற்றும் போதனா நிலையத்திற்கு வந்தார். நீண்ட நாட்கள் சிகிச்சைப் பெற்ற பின் முழுமையாக குணமடைந்தார். அதன்பின் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே தங்கி சைக்கிள் கடையை துவக்கினார்.

கடந்த 10 ஆண்டுகளாக மர வேலைகள் செய்யும் தொழிலை கற்றுக் கொண்டு, வீட்டிலேயே வேலை செய்து வருகிறார். இப்பகுதியில் யார் வீட்டிலாவது பாம்பு புகுந்தால் உடனே முத்து ஷாவை கூப்பிடுவர். அவரும் பாம்புகளைப் பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு விடுவார். நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், வெள்ளை கத்திரி, ராஜநாகம், கருநாகம், கொம்பேரிமூக்கன் போன்ற விஷமுள்ள பாம்புகள், சாரை பாம்பு, கருஞ்சாரை, கோதுமை சாரை போன்ற சாதாரண பாம்புகள் என ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ளார். இவருக்கு ஜீனத் என்ற மனைவியும், நூர்முகமது, மும்தாஜ், ஜரினா, அமிர்கான், நிஷா என ஐந்து குழந்தைகள் உள்ளனர். தந்தையைப்போல் குழந்தைகளும் பாம்புகளைக் கண்டு அஞ்சாமல் பிடித்து விளையாடுகின்றனர்.

இதுகுறித்து முத்துஷா கூறியதாவது: சிறுவயதிலிருந்தே பாம்புகளை பிடிப்பதென்றால் எனக்கு ஆர்வம் அதிகம். அப்போதிருந்தே யார் வீட்டிலாவது பாம்பு புகுந்துவிட்டால் நானே ஓடிச் சென்று பிடிப்பேன். தொழுநோயால் பாதிக்கப்பட்டு 33 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சிகிச்சைக்கு வந்தேன். சிகிச்சை முடிந்து இங்கேயே தங்கிவிட்டேன். இப்பகுதி மலைகளும், காடுகளும் நிறைந்த பகுதியாக இருப்பதால் பாம்புகள் அதிகமாக காணப்படுகிறது. அவை அருகில் உள்ள வீடுகளுக்குள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. உடனே என்னை அழைப்பர். நானும் விரைவாக சென்று பாம்பை பிடிப்பேன். அதற்காக அவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்றுக் கொள்வேன்.

இதுவரை 25 ஆயிரம் பாம்புகளை பிடித்துள்ளேன். ஒரு பாம்பை கூட அடித்து கொன்றது கிடையாது. பிடிக்கும் பாம்புகளை காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டுவிடுவேன். பாம்புகளை பிடிக்கும்போது ஆறு முறை கடித்துள்ளன. கட்டுவிரியன் பாம்பு தவிர மற்ற பாம்புகள் கடித்துள்ளன. பாம்பு கடித்தவுடன் கட்டு கட்டி நீவி விட்டு ரத்தத்தை வெளியேற்றுவேன். பின் மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் காட்டுவேன். அவர்களும் ஊசி போட்டு ரத்தத்தை உடனே பரிசோதனை செய்வர். என் ரத்தத்தில் விஷம் இல்லை எனப் பரிசோதனை முடிவு வரும். நானும் வீட்டிற்கு திரும்பி விடுவேன். சில நேரங்களில் பெட்டில் மருத்துவமனையில் சேரும்படி சொல்வர். இதுவரை மூன்று முறை மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன்.

பாம்பு கடித்தால் பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது. கட்டுபோட்டு விட்டு டாக்டரிடம் செல்லலாம். பாம்பு கடித்தால் பயத்திலேயே நிறைய பேர் இறக்கின்றனர். நல்ல பாம்புக்கு இரண்டு பற்களும், கண்ணாடி விரியன் பாம்புக்கு நான்கு பற்களும் இருக்கும். ஆனால் கட்டுவிரியன் பாம்புக்கு வாய் முழுவதும் பற்கள் இருக்கும். அந்த பாம்பு கடித்தால் உடனே இறக்க நேரிடும். என்னைப் போலவே என் குழந்தைகளும் பாம்புகளை பிடிப்பர். நாங்கள் பாம்புகள் பிடிப்பதை பார்த்து இப்பகுதி மக்கள் யாரும் பயப்படுவதில்லை. சிறுபிள்ளைகள் பொம்மைகளுடன் விளையாடுவதைப் போல் அவர்களும் பாம்புகளுடன் விளையாடுகின்றனர், என்றார். விஷமில்லாத தண்ணீர் பாம்பை கண்டாலே பயப்படும் நிலையில் அதிக விஷம் கொண்ட பாம்புகளையும் பிடித்து விளையாடுவதைக் காணும் பாரதபுரம் மக்களும் பய உணர்வின்றி பாம்புதானே என்ற மனநிலைக்கு மாறியுள்ளனர்.