பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2010,03:04 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=130751
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=130751
பெ.நா.பாளையம் : "காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க ரேடியோ காலரிங் சேட்டிலைட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படும்' என தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் கூறினார்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, கோவனூர் கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தா நகர் குடியிருப்பு பகுதிக்குள் கடந்த 11ம் தேதி இரவு புகுந்த காட்டு யானை வீட்டுக்கு முன் நின்று கொண்டிருந்த வெண்ணிலா என்ற பெண்ணை மிதித்து கொன்றது. காட்டு யானைகளின் அட்டகாசத்தை அடக்க நஞ்சன், கார்த்திக் என்ற கும்கி யானைகளை கிராம எல்லைகளில் வனத்துறையினர் நிறுத்தியுள்ளனர்.
யானைகளின் வரவை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் பெரியநாயக்கன்பாளையம் வந்தார். இங்குள்ள ஜல்லிமேட்டுபுதூர் கிராமத்தையொட்டி கருப்பட்டிராயர் கோயில் வனத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தோண்டப்படும் யானை தடுப்பு அகழியை ஆய்வு செய்தார்.
இன்னும் அதிக ஆழம் மற்றும் அகலத்தில் அகழி தோண்ட அறிவுரை வழங்கினார். பின் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:தமிழகத்தில் 22 இடங்களில் யானைகளின் வழித்தடம் உள்ளது. இவற்றில் 12 வழித்தடத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. காட்டு யானைகளின் வரவை உடனுக்குடன் கண்டறிய ரேடியோ காலரிங் சேட்டிலைட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படும். இதில், யானைகளை இருப்பிடத்தை கண்டறிய அதன் கழுத்தில் அல்லது காலில் மைக்ரோபோன் போன்ற கருவி பொருத்தப்படும். அதன் தொடர்பு சேட்டிலைட் உதவியுடன் அந்தந்த வனச்சரக அலுவலகத்தில் உள்ள கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும். யானைகள் எல்லை தாண்டி வரும் போது சிக்னல் ஒலி கிடைக்கும். பின்னர் கும்கிகளை கொண்டோ அல்லது யானை தடுப்பு காவலர்களை கொண்டோ யானைகள் காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இனி தோண்டப்படும் அகழிகள் 8 அடி ஆழம், அகலம் உடையதாக இருக்கும். தமிழகம் முழுவதும் 1167 கி.மீ. தூரத்துக்கு சூரிய மின்வேலி அமைக்கப்பட்டது. கோவையில் மட்டும் 200 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி கோவையில் வனத்துறையினர், பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், விவசாயிகள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது.இவ்வாறு அமைச்சர் செல்வராஜ் கூறினார்.
தொடர்ந்து ராயர்ஊத்துபதி, பாலமலை அடிவாரம் சென்றார். காட்டு யானைகளை அடக்க நிறுத்தப்பட்டிருக்கும் கும்கி யானைகளையும் பார்வையிட்டார். அமைச்சருடன் மண்டல வனப்பாதுகாவலர் கந்தசாமி, மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு,வனச்சரகர் பன்னீர்செல்வம், வனக்குழு தலைவர்கள் ஜார்ஜ், சவுந்திரராஜ், அறிவரசு இருந்தனர்.