குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த பூஜை:கிடாய் வெட்டி போலீசார் வழிபாடு
பதிவு செய்த நாள் : நவம்பர் 20,2010,01:03 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=129960
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=129960
புதுக்கோட்டை: சாலை விபத்து மற்றும் குற்றச்செயலைக் கட்டுப்படுத்துமாறு புதுக்கோட்டையின் காவல் தெய்வமான பொற்பனையான் சுவாமியை வேண்டி இரவு விடிய, விடிய கிடாய் வெட்டி போலீசார் பூஜை செய்தது அம்பலமாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல், செயின் பறிப்பு போன்ற குற்றச் செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொலையாளிகளிடமிருந்து அப்பாவி மக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள் கூட தப்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம், தி.மு.க., நகரச் செயலாளர் மணிமாறன் கொலைகள் இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. குடும்பத் தகராறு, சொத்து தகராறு, கொடுக்கல், வாங்கல் தகராறு போன்ற சின்னச்சின்ன பிரச்னைக்குக் கூட கூலிப்படையை ஏவிவிட்டு எதிரிகளை வீழ்த்துவது என்பது புதுகை மாவட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதுபோன்று வீடு புகுந்து நகைகள் திருடுவது, தனிமையில் இருக்கும் பெண்களை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து செல்வது, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், கோவில்கள் மற்றும் கடைவீதிகளுக்கு சென்று திரும்பும் பெண்களை குறிவைத்து அவர்களுடைய செயின் உள்ளிட்ட நகைகளை பறித்து செல்வது. அடியாட்களை வைத்து மிரட்டி கடனாளிகளிடம் கந்துவட்டி வசூல் செய்வது, வெளியூர்களில் வசிப்பவர்கள் மற்றும் வாரிசுகள் இல்லாதவர்களை அடையாளம் கண்டு அவர்களது சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்வது போன்ற குற்றச் செயல்களும் அதிகரித்து வருகிறது.
இதில், தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல் மாவட்ட போலீஸ் விழிபிதுங்கி உள்ளது. அறந்தாங்கி டவுன் பகுதிக்குள் நகைக்கடை நடத்திவரும் பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமாரை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த ரவுடிக் கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியபின் அவரிடமிருந்த 35 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை பறித்துச் சென்றனர். சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்தும் தொடர்புடையவர்களை போலீஸாரால் அடையாளம் காண முடியவில்லை. கொலை வழக்குகளை பொறுத்தமட்டில் இதில் தொடர்புடையவர்கள் தானாக முன்வந்து நீதிமன்றங்களில் சரணடைந்தால் மட்டுமே அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கின்ற அவலநிலை நீடிக்கிறது. போலீஸ் துறையில் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீஸ் காலிப்பணியிடங்கள் அதிகரித்துவரும் நிலையில் போதிய போலீஸார் இல்லாததால் தான் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போலீஸாரே ஒப்புக்கொள்கின்றனர்.
இதற்கிடையே சாலை விபத்துகள் மூலம் போலீசார் உயிரிழக்கின்ற சம்பவங்களும், போலீஸ் வாகனங்கள் சேதமடைகின்ற சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. மாத்தூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸாரின் "ஹைவே பெட்ரோல்' கார் மீது டிப்பர் லாரி மோதியதில் எஸ்.ஐ., உட்பட மூன்று போலீஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அம்மாவட்ட போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
போலீஸ் நடவடிக்கையால் மட்டும் இதுபோன்ற குற்றச் செயல்களையும், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த போலீசார் புதுக்கோட்டையின் காவல் தெய்வமான பொற்பனையான் சுவாமியின் அருளை நாடியுள்ளனர். இதற்காக கடந்த 14ம் தேதி இரவு மூன்று கிடாய்களை பலி கொடுத்து விடிய, விடிய சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் போலீசார் பலர் குடும்பத்துடன் பங்கேற்றனர். போலீஸ் தரப்பில் விசாரித்த போது, "மாவட்டத்தில் குற்றச்செயல் மற்றும் விபத்து அதிகரிக்கும் போது இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுவது வழக்கமான ஒன்று தான்' என்றனர்.