பதிவு செய்த நாள் : நவம்பர் 17,2010,22:59 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=128546
தான்குனி : மேற்கு வங்கத்தில், யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்ததற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பில்லை; வனத்துறையினரின் அலட்சியத்தால் தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன என்று மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், பின்னாகுரி மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில், கடந்த மாதம் ஏழு யானைகள் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, சரக்கு ரயிலில் அடிபட்டு இறந்தன. சம்பவ இடத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சென்று பார்வையிட்டார். பின்னர், அலிபுர்டூர் மற்றும் ஜல்பைகுரி இடையேயான 160 கி.மீ., தூரம் கொண்ட, யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள காட்டுப் பகுதியில், ரயில்கள் 30 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிலையில், ஜல்பைகுரி மாவட்டத்தில் பக்சா வனப்பகுதியில் உள்ள தால்கான் என்ற இடத்தில், நேற்று முன்தினம் ரயிலில் அடிபட்டு ஒரு யானை இறந்தது.
மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: யானைகள் ரயில் தண்டவாளங்களை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறப்பதற்கு, ரயில்வே நிர்வாகம் பொறுப்பாக முடியாது; வனத்துறையினரின் அலட்சியத்தால் தான் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன. வனத்துறை ஊழியர்கள், தண்டவாளத்தின் அருகே யானைகள் நடமாட்டம் இருக்கும் போது, அதுகுறித்து ரயில் இன்ஜின் டிரைவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். ஆனால், அதை அவர்கள் செய்யத் தவறுவதால் தான் இத்தகைய விளைவுகள் ஏற்படுகின்றன. இதில், ரயில்வே நிர்வாகம் மீது குறை சொல்வதற்கு எதுவுமில்லை. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. நானும் சுற்றுச்சூழலின் நண்பன் தான். எனினும், ரயில்வே விவகாரத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகம் தலையிடுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறு மம்தா கூறினார்.