Pages

Thursday, November 25, 2010

புலித்தோல்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்திவரப்பட்ட புலித்தோல்கள் பறிமுதல்
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது

கோவை,நவ.26-
http://dailythanthi.com/article.asp?NewsID=609546&disdate=11/26/2010&advt=2

பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட புலித்தோல்களை நேற்று வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

புலித்தோல்கள் கடத்தல்

கோவை அவினாசி சாலையில் ஒரு காரில் புலித்தோல்கள் கடத்தி கொண்டுவரப்படுவதாக கோவை மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட வன அதிகாரி திருநாவுக்கரசு உத்தரவின்பேரில் கோவை வனச்சரகர் சண்முக ராஜேஷ்வரன் தலைமையில் வனத்துறையினர் கருமத்தம்பட்டி அருகில் நேற்று காலை வாகன சோதனை செய்தனர்.

அப்போது ஒரு காரை மடக்கி பார்த்தபோது அந்த காரில் 8 பேர் இருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் எழுந்ததும் அந்த காரை வனத்துறையினர் சோதனை செய்தனர். காரில் ஒரு பையில் இருந்து 2 புலித்தோல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

8 பேர் கைது

அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து, புலித்தோல்களை கடத்தி வந்ததாக காரில் இருந்த 8 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த நியாஸ் பர்கத் (வயது 24), விழுப்புரத்தை சேர்ந்த ஜோ (20), ஒரிசாவை சேர்ந்த வெங்கடரெட்டி (23), திருவண்ணாமலை, திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த துரை என்கிற சபரிநாயகம் (25), தியாகராஜன் (25), அருள் என்கிற தனசேகரன் (23), சேகர் (24), கோபிநாத் (24) என்று தெரியவந்தது.

இதில் நியாஸ் பர்கத், ஜோ, வெங்கடரெட்டி ஆகிய 3 பேரும் பெங்களூரில் ஒரு மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தவர்கள் ஆவார்கள். பெங்களூரில் இருந்து கோவைக்கு புலித்தோல்களை கடத்தி வந்து ரூ.10 லட்சத்துக்கு விற்க முயன்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

இதுபற்றி வனத்துறையினர் கூறியதாவது:-

மருத்துவ மாணவர்கள்

நியாஸ், ஜோ, வெங்கடரெட்டி ஆகிய 3 பேரும் பெங்களூரில் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்தபோது தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். அப்படி ஒருநாள் வாக்கிங் சென்றபோது ஒரு பாலத்தின் அருகில் கிப்ட் பேப்பர் சுற்றிய பார்சல் இருந்ததாகவும், அதனுள்ளே 2 புலித்தோல்கள் இருந்ததாக கூறி உள்ளனர்.

உடனே அவற்றை தங்களது அறைக்கு கொண்டு வந்து மறைத்து வைத்துக்கொண்டு, அதை விற்று பணமாக்க முயற்சித்து இருக்கிறார்கள். அதற்காக தனது நண்பர்கள் சிலரிடம் தெரிவித்து அவர்கள் சொன்ன தகவலின்பேரில் கோபிநாத்தின் நட்பு அவர்களுக்கு கிடைத்து உள்ளது. அந்த புலித்தோலை கோவை உக்கடத்தில் தனக்கு தெரிந்த ஒருவரிடம் ரூ.10 லட்சத்துக்கு விற்றுத் தருவதாக கோபிநாத் கூறி இருக்கிறார்.

பரிசோதனை செய்யப்படும்

அதையடுத்து மாணவர்கள் 3 பேரும் மற்ற 5 பேரும் கோபிநாத் காரில் கோவைக்கு வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் கருமத்தம்பட்டியை கடந்து வரும்போது கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டவை உண்மையிலேயே புலித்தோல்கள்தானா? அல்லது போலியானதா? என்று கோர்ட்டு அனுமதியின்படி பரிசோதனைக்கு அனுப்பப்படும். அதை பார்க்கும்போது சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த புலியில் இருந்து எடுக்கப்பட்டதுபோல் தெரிகிறது.

கோவையில் புலித்தோல்களை விலைக்கு வாங்குவதற்கு தயாராக இருந்த கும்பல் யார்? என்றும் விசாரித்து வருகிறோம். அவர்களை கைது செய்யவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கைதான 8 பேரும் அவினாசி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.