பல்வேறு நிபந்தனைகள் விதித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம்
வியாழக்கிழமை, நவம்பர் 25, 2010, 14:27
http://thatstamil.oneindia.in/news/2010/11/25/tamilnadu-culture-jallikkatu-sc.html
டெல்லி: ரூ. 2 லட்சம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்க தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ரவீந்திரன், பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. இன்று இறுதிக் கட்ட விசாரணை நடந்தது.
அப்போது தமிழகஅரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் கோபாலகிருஷ்ணன் ஆஜராகி, களமிறக்கப்படும் காளைகள் அவற்றை அடக்கும் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோருக்கு உரிய பாதுகாப்புகள் செய்த பிறகே, ஜல்லிக்கட்டு நடத்தப்படுகின்றன.
போட்டிகளுக்கு முன்னதாக காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. எனவே காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. கடந்த முறை தமிழகத்தில் 129 இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டு 46 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதை ஏற்ற பெஞ்ச், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிப்பதாக உத்தரவிட்டனர். மேலும், ஏராளமான நிபந்தனைகளையும் விதித்தனர்.
அதன்படி, ஜனவரி முதல் மே மாதம் வரைதான் போட்டி நடத்த வேண்டும். விதிகளின்படி விண்ணப்பித்து ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள்தான் உறுதி செய்ய வேண்டும்.
முன்னதாகவே விலங்குகள் நல அமைப்புக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தெரியப்படுத்த வேண்டும். ரூ. 2 லட்ச ரூபாய் டெபாசிட் தொகை கட்டப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்