பழனி முருகன் கோவிலில் மயிலை விழுங்க முயன்ற மலைப் பாம்பு பிடிபட்டது
பழனி, அக்.7-
http://dailythanthi.com/article.asp?NewsID=598839&disdate=10/7/2010&advt=2
பழனி முருகன் கோவிலில் மயிலை விழுங்க முயன்ற 10 அடி நீளமுள்ள மலை பாம்பு பிடிபட்டது.
முருகன் கோவில்
பழனி முருகன் கோவில் மலைப்பகுதியில் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் காணப்படும் அடர்ந்த பகுதி உள்ளது. இங்கு மலைப்பாம்புகள் உள்ளன. மேலும் பழனி மலையில் ஒரு சில மயில்களும் வசித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று மாலை பழனி மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் அன்னதான மண்டபத்தின் பின்புறம் அமைந்துள்ள புதர்ப்பகுதியில் ஒரு மலைப் பாம்பு அங்கு நின்று கொண்டு இருந்த ஒரு பெண் மயிலை விழுங்க முயன்றது மலைப்பாம்புக்கும் பெண் மயிலுக்கும் இடையே பயங்கர போராட் டம் நடைபெற்றது. இதில் மலைப்பாம்பு பெண் மயிலை கவ்வி விழுங்க முயன்றது. பின்னர் பிடிப்பட்ட மயிலுடன் மலைப்பாம்பு நகர முடியாமல் கிடந்தது. இதை கண்ட ஆண் மயில் தொடர்ந்து சப்தம் எழுப்பிய வண்ணம் இருந்தது.
பிடிக்க நடவடிக்கை
இதைப் பார்த்த பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இரவு நேரம் என்பதாலும், மயிலை விழுங்கிய பிறகு மலைப்பாம்பு உருண்டு புதருக்குள் சென்று விட்டதாலும் மலைப்பாம்பினை பிடிப்பதில் சிரமம் ஏற் பட்டது.
கோவில் நிர்வாகம் சார்பில் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச் சரகர் தர்மராஜ் தலைமையில் வனவர் சந்திரன், வனகாப்பாளர்கள் கலைச்செல்வன், முனியான்டி, ஈஸ்வரன், ராஜேந்திரன் ஆகியோருடன் பாம்பு பிடிப்பதில் கை தேர்ந்த நிபுணர் ஹலோ டெய்லர் நடராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புதருக்குள் மயிலை விழுங்க முயன்ற நிலையில் இருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை பிடிக்க முயன்றனர். அப்போது பாம்பு தன் வாயில் கவ்வி இறந்த நிலையில் இருந்த மயிலை விட்டு விட்டு, புதருக்குள் ஒடி மறைந்தது. பாம்பை பின் தொடர்ந்து பாம்பு பிடி நிபுணர் நடராஜன் புதருக்குள் மறைந்து இருந்த பாம்பினை லாவமாக பிடித்து தூக்கி வந்தார்.
10 அடி நீளம்
தூக்கி வந்த மலைப்பாம்பினை மலைக்கோவில் மின் இழுவை ரெயில்நிலையத் தில் வைத்து சாக்கு பையில் கட்டி, பழனிமலை கோவில் இருந்து கீழே கொண்டு வந்தனர். அதன் பின் வனஅலுவலர்கள் அதன் நீளத்தை அளந்தனர். அதன் நீளம் 10 அடி இருந்தது. பிடிப்பட்ட மலைப்பாம்பினை பழனி கோவில் உதவி ஆணையர் நடராஜன், மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். மலைப்பாம்பினை வன அலுவலர்கள் கொடைக்கானல் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுவிட எடுத்து சென்றனர்.இச்சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.