புதன்கிழமை, அக்டோபர் 27, 2010, 17:33[IST]
http://thatstamil.oneindia.in/news/2010/10/27/tamilnadu-jallikattu-sc-nov.html
http://thatstamil.oneindia.in/news/2010/10/27/tamilnadu-jallikattu-sc-nov.html
டெல்லி : தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை யை நவம்பர் 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்திய விலங்குகள் நல வாரியம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகள் தொடர்பாக வாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது வழக்கு.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நெடுமாறன், ஏற்கனவே இதுதொடர்பாக சட்டம் கொண்டுவரப்பட்டதை சுட்டக் காட்டினார். மேலும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என பிராணிகள் நல வாரியத்தின் யோசனையை ஏற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதுபோக போட்டியாளர்களுக்கு காப்பீடு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவற்றை நடத்தவும் தமிழக அரசு ஒப்புக்கொள்கிறது என்றும் தெரிவித்தார்.
பிராணிகள் நல வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுந்தரம், போட்டி நடைபெறும் இடத்தில் 6 அடி தடுப்பு வேலி, மருத்துவ அதிகாரிகள் அடங்கிய குழுவினர், கால்நடை மருத்துவர்கள், பிராணிகளுக்கு பரிசோதனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை நவம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.