Pages

Saturday, October 23, 2010

வன விலங்குகளுக்கு சூரிய சக்தி மூலம் குடிநீர்

வன விலங்குகளுக்கு சூரிய சக்தி மூலம் குடிநீர் : புதிய முறை அமல்

பதிவு செய்த நாள் : அக்டோபர் 22,2010,23:07 IST

உடுமலை : கோடை காலத்தில் வன விலங்குகளின் தாகத்தை தீர்க்க, உடுமலை வனப்பகுதியில் சூரிய சக்தி மூலம் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் புதிய முறை, சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரக பகுதியில் யானை, காட்டெருமை, புள்ளி மான், கடமான், சிறுத்தை, புலி உட்பட வன விலங்குகள் உள்ளன. கோடை காலத்தில் வனப்பகுதியிலுள்ள ஓடைகள் அனைத்தும் வறண்டு, வன விலங்குகள் குடிநீருக்கும் அலையும் நிலை ஏற்படுகிறது.

இதற்காக, வனத்துறை சார்பில் வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து, போர்வெல், கை பம்புகள் மூலம் தண்ணீர் இறைத்து தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் வன ஊழியர்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால் மின் வசதி, மோட்டார் அமைக்க முடியாததால், வன விலங்குகள் பல கிலோ மீட்டர் தண்ணீருக்காக இடம் பெயரும் நிலை உள்ளது. வன ஊழியர்கள் வன பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போது, தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையை சமாளிக்க, இந்தியாவில் முதல் முறையாக சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து, அதன் மூலம் மோட்டார் இயக்கி தண்ணீர் தொட்டிகளுக்கு அனுப்பும் முறை, ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரக பகுதியில் பரிசோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தானியங்கி முறையும் உள்ளதால், தானாக இயங்கி, தண்ணீர் நிரப்பலாம். இதனால், வன ஊழியர்கள் தினமும் வனப்பகுதிகளுக்குள் செல்ல வேண்டியதில்லை. இந்த முறை நான்கு மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் கூறியதாவது: வறட்சி காலத்தில் வன விலங்குகள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கும் நிலை உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது. மின் வசதி இல்லாத பகுதிகளில் சூரிய சக்தி மூலம் விளக்கு மற்றும் மோட்டார்கள் இயக்கப்படுகின்றன.

சூரிய சக்தி மூலம் வன விலங்குகளுக்கு தண்ணீர் வழங்கும் முறை முதன் முறையாக, உடுமலை வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 150 அடி ஆழ போர்வெல் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, சூரிய சக்தி மூலம் ஆற்றல் உருவாக்கப்பட்டு, மின்சாரமாக மாற்றி பேட்டரிகளில் சேமிக்கப்படுகிறது. பின்னர், ஒரு எச்.பி., திறனுள்ள சப்மெர்சபிள் பம்ப், மின்சாரம் மூலம் இயக்கப்பட்டு நீர் இறைத்து, தொட்டிக்கு விடப்படுகிறது.

தானியங்கி அமைப்பு உள்ளதால், குறிப்பிட்ட நேரம் தானாக மோட்டார் இயங்கி, தொட்டிக்கு தண்ணீர் விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கன்வெர்ட்டர் அமைப்பு உள்ளதால், மோட்டாரும் பாதிக்காது. இந்த முறையால், அடர்ந்த வனப்பகுதிகளிலும் வன விலங்குகளுக்கு குடிநீர் எளிதாக வழங்க முடியும்.

1.50 லட்சம் ரூபாய் செலவில், கோவையைச் சேர்ந்த "கிரீன் வின்ட் அண்ட் சோலார் பவர் டெக்' என்ற தனியார் நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. இதை நிறுவி, நான்கு மாதங்களாக சோதனை மேற்கொள்ளப்பட்டு இயங்கி வருகிறது. தொடர்ந்து, அனைத்து வனப்பகுதிகளிலும் இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளது என்றார். உடுமலை வனச்சரகர் சரவணன், தனியார் நிறுவன இயக்குனர் ஹரிஹர மூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.