Pages

Friday, October 8, 2010

வனப்பகுதி ரோட்டில் கரடிகள் நடமாட்டம்

சத்தியமங்கலம் அருகே வனப்பகுதி ரோட்டில் கரடிகள் நடமாட்டம்
அதிர்ஷ்டவசமாக 2 பேர் உயிர் தப்பினார்கள்

பவானிசாகர், அக்.8-
http://dailythanthi.com/article.asp?NewsID=599186&disdate=10/8/2010&advt=2

சத்தியமங்கலம் அருகே வனப்பகுதி ரோட்டில் நேற்று திடீர் என்று கரடிகள் வந்தன. அப்போது அந்த வழியில் நடந்து சென்ற 2 பேர் கரடிகளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து அங்கு இருந்து வேகமாக ஓடி உயிர் தப்பினார்கள்.

வனபகுதிகளில் மழை

சத்தியமங்கலம் அருகே ஆசனூர் வனப்பகுதிக்கு உட்பட்ட திம்பம், தலமலை, கேர்மாளம், உக்னியம், கோட்டாடை ஆகிய பகுதிகள் அடர்ந்த வனப்பகுதிகள் ஆகும். இங்கு யானைகள், சிறுத்தை, கரடிகள் அதிகமாக வசிக்கிறது. கடந்த மாதம் வரை வனப்பகுதி வறட்சியாக காணப்பட்டதால் வனவிலங்குகளுக்கு போதிய தண்ணீரும், தேவையான உணவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வனப்பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அங்கு உள்ள குளம், குட்டைகள், தடுப்பணைகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது வனப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்படுகிறது.

கரடிகள் நடமாட்டம்

அரேப்பாளையத்தில் இருந்து கேர்மாளம் செல்லும் வழியில் கரடிகள் அதிகமாக உள்ளன. மலைப்பகுதியில் பெய்துள்ள பலத்த மழையாலும், வனப்பகுதியில் கருமேக கூட்டம் பகலில் சூழ்ந்திருப்பதாலும் எப்போதும் வனப்பகுதி இருட்டாகவே காட்சி அளிக்கிறது.

இதனால் வனப்பகுதியில் வசிக்கும் கரடிகள் கூட்டம், கூட்டமாக ரோட்டில் நடமாடுகிறது. கேர்மாளம் ரோட்டில் நேற்று 3 கரடிகள் திடீர் என்று நடந்து சென்றது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற 2 பேர் அதை பார்த்து விட்டு அங்கு இருந்து வேகமாக ஓட்டம் பிடித்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். கரடிகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் அந்த பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்களும் கவனமாக, எச்சரிக்கையாக செல்லவேண்டும். 2 சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ரோட்டை வேகமாக கடக்கும் வனவிலங்குகள் மீது மோதி பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க குறைந்த வேகத்தில் செல்லவேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.