வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினார்கள்
அந்திïர், அக்.7-
http://dailythanthi.com/article.asp?NewsID=599019&disdate=10/7/2010&advt=2
வரட்டுப்பள்ளம் அணையில் நேற்று சிறுத்தைப்புலி ஒன்று நடமாடியதை பார்த்த சுற்றுலா பயணிகள் அங்கு இருந்து வேகமாக திரும்பி வந்து உயிர் தப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சிறுத்தைப்புலியை பார்த்து ஓட்டம்
ஈரோடு மாவட்டம் அந்திïர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை தற்போது பெய்து வரும் பலத்த மழையால் நிரம்பி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. எனவே இந்த அணையை பார்க்க சுற்றுலா பயணிகள் தற்போது வந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று அணையை பார்க்க வந்த சுற்றுலா பயணிகளில் சிலர் அணையின் ஜீரோ பாயிண்ட் பகுதியில் இருந்து 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்பரவாணிபள்ளம் நீர் ஓடைக்கு சென்று அங்கு இருந்து எவ்வளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது என்பதை பார்வையிட்டனர். அப்போது அங்கு திடீர் என்று ஒரு சிறுத்தைப்புலி வந்தது. புலியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வேகமாக திரும்பி தப்பி வந்து விட்டனர்.
தடயங்கள் சேகரிப்பு
அணை பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பது குறித்து உடனடியாக வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் சிறுத்தைப்புலியின் கால் தடம் பதிந்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். புலியின் கால் தடங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.
இதன் மூலம் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதி அருகில் உள்ள தாமரைக்கரை மலைக்கிராமத்தில் 3 வயது சிறுத்தைப்புலி ஒன்று வாகனத்தில் அடிப்பட்டு செத்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.
மான் வேட்டையாட...
இது குறித்து அந்திïர் வனத்துறை அதிகாரி பழனிச்சாமி கூறியதாவது:-
வரட்டுப்பள்ளம் அணைக்கு மான், யானை, செந்நாய், கரடி, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வரும். இப்போது மழை பெய்து அணை முழுவதும் நிரம்பி ஆழமாக இருப்பதாலும், அந்த தண்ணீர் செம்மண் நிறத்தில் கலங்கலாக இருப்பதாலும் அந்த வனவிலங்குகள் அணைக்கு வருவது இல்லை.
எனவே அருகில் உள்ள கும்பரவாணிபள்ளம் நீர் ஓடைக்கு சென்று வன விலங்குகள் தண்ணீரை குடித்து வருகின்றன. எனவே அங்கு தண்ணீர் குடிக்க வரும் மான் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதற்காகவே சிறுத்தைப்புலி அந்த பகுதிக்கு வந்து உள்ளது. சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பது தெரியவந்து உள்ளதால் பொதுமக்கள் மற்றும் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் யாரும் காட்டுக்குள் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.