Pages

Monday, October 25, 2010

மகரந்த சேர்க்கை குறைவால் மனித குலத்துக்கு ஆபத்து

மகரந்த சேர்க்கை குறைவால் மனித குலத்துக்கு ஆபத்து : ஹாங்காங் பேராசிரியர் எச்சரிக்கை
பதிவு செய்த நாள் : அக்டோபர் 25,2010,22:09 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=113607

கோவை : ""பூச்சியினங்கள் வேகமாக அழிந்து வருவதால், மனித குலம் அபாய நிலையில் உள்ளது. மொபைல்போன் டவர், பூச்சி கொல்லிகளால் பறவையினம் அழிந்து வருவதால், மகரந்த சேர்க்கை குறைந்து தாவரங்கள் அழிந்து வருகின்றன. இப்பிரச்னைக்கு விரைவில் நல்ல தீர்வு கண்டாக வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது,'' என, ஹாங்காங் பேராசிரியர் ரோஜர் கென்ட்ரிக் பேசினார்."ஆசிய பட்டாம் பூச்சிகள் பாதுகாப்பு' குறித்த ஐந்து நாள் பயிற்சி மற்றும் கருத்தரங்கம்,கோவை பாரதியார் பல்கலையில் நேற்று துவங்கியது.

பல்கலையின் விலங்கியல் துறை, "ஜூ அவுட்ரீச்' அமைப்பு இணைந்து நடத்திய கருத்தரங்கின் துவக்க விழாவில் துணைவேந்தர் சுவாமிநாதன் பேசியதாவது: உலகம் முழுவதும் பூச்சியினங்கள் உள்ளன. இதில் சிலவற்றை தவிர பெரும்பாலானவை நன்மை தருபவை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இதன் பங்கு முக்கியம். பல மிருகங்களின் உணவாகவும் பூக்களில் மகரந்த சேர்க்கை நடக்கவும் இவை உதவுகின்றன. 1,500 பட்டாம்பூச்சிகள் இந்திய உபகண்டத்தில் உள்ள வட கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வசிப்பவை. இந்த அழகிய உயிரினம் தற்போது மெள்ள அழிந்து வருகிறது. சூழல் மாசு காரணமாக பல மிருகங்கள், பறவைகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் அழிந்து வருகின்றன. பயிர்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகளை உண்ணும் பட்டாம் பூச்சிகள் அழிந்து வருகின்றன. மனிதர்களே இதன் அழிவுக்கு காரணம். பூச்சியினங்கள் அழிந்து விடாமல் தடுக்க விரைவில் தீர்வு காண்பது அவசியம். இவ்வாறு சுவாமிநாதன் பேசினார்.

ஹாங்காங்கை சேர்ந்த பேராசிரியர் ரோஜர் கென்ட்ரிக் பேசியதாவது: பூச்சியினங்கள் வேகமாக அழிந்து வருவதால், மனித குலம் அபாய நிலையில் உள்ளது. இங்கிலாந்தில் 50 ஆண்டுகளில் 99 சதவீத பட்டுப்பூச்சிகளும், அமெரிக்காவில் 50 - 60 சதவீத பட்டுப்பூச்சிகளும் அழிந்து விட்டன. காடுகள் அழிப்பு, சல்பர் பை ஆக்சைடு மற்றும் நைட்ரிக் ஆக்சைடு அடங்கிய பூச்சி மருந்து பயன்பாடு ஆகியவை பூச்சி, பறவை அழிவுக்கு முக்கிய காரணங்கள். தொழில் நுட்ப உதவியால் தீர்வு காணலாம். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதும் தீர்வு தரும். பட்டாம்பூச்சி உள்ளிட்ட பூச்சியினங்கள் அழிவதால் மகரந்த சேர்க்கை குறைந்து, தாவர இனங்களும் அழிந்து வருகின்றன. உலகம் முழுவதும் அடுத்த 30 ஆண்டுகளில் பெருகப் போகும் மக்கள் தொகையின் உணவுத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, தீர்வை கண்டறிய வேண்டும். நகரமயமாதல் அதிகரிப்பு, விவசாய நிலங்கள் சுருங்குவது ஆகிய மாற்றம் தான், பறவைகளின் அழிவுக்கு முக்கிய காரணம். சீனாவில் காடுகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. மீண்டும் அதேபோன்ற காடுகளை கொண்டு வர முயற்சிப்பதை விட, இருக்கும் காடுகளையும் அவற்றை நம்பி வாழும் உயிரினங்களையும் பாதுகாப்பது நல்லது. இந்தியா மட்டுமல்லாமல், ஆசிய கண்டம் முழுவதும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இவ்வாறு ரோஜர் கென்ட்ரிக் பேசினார்.