பதிவு செய்த நாள் : அக்டோபர் 20,2010,03:00 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=110256
தூத்துக்குடி பக்கீள் ஓடை சேற்று மண்ணிற்குள் புதைந்து சிக்கிக் கொண்ட மாடு ஒன்றினை தீயணைப்பு படைவீரர்கள் போராடி மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தூத்துக்குடி மாநகர் பகுதி வழியாக செல்லும் பக்கிள் ஓடையை சீரமைக்கும் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது வேகமாக நடந்தது வருகிறது. இதற்காக பல இடங்களில் ஓடை பொக்லைன் வைத்து தோண்டப்பட்டு வருகிறது. தோண்டிய இடங்களில் எல்லாம் கான்கீரிட் தளமும், தடுப்பும் அமைக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் தற்போது ஓடையை தோண்டி அதில் உள்ள கழிவு மண்ணை ரோட்டின் ஓரம் குவித்து வைத்துள்ளனர். சேறும், சகதியுமாக உள்ள மண்ணை அதில் உள்ள ஈரத்தன்மை போன பின்பு அங்கிருந்து அகற்றி வருகின்றனர். இந்நிலையில் மாலையில் மூன்றாம் கேட் மேம்பாலம் அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த சேற்று மண்ணில் பசுமாடு ஒன்று நடந்து சென்றுள்ளது. அதன் வெளிப்பகுதி காய்ந்த நிலையில் இருந்தாலும் உள்ளே ஈரமாக இருந்துள்ளது. இதனால் அதன் வழியாக சென்ற மாடு திடீரென சேற்று மண்ணிற்கு புதைந்து சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் திணறியது. இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் சேற்றிற்குள் சிக்கிய மாட்டினை காப்பாற்றி வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஆனால் சேற்றில் இருந்து மாட்டினால் வெளியே வரமுடியவில்லை. உடனே இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புபடை வீரர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்பு மாட்டினை பத்திரமாக வெளியில் கொண்டு வந்தனர். சேற்றிற்குள் பசு மாடு ஒன்று சிக்கிய சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.