Pages

Wednesday, October 13, 2010

சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிருடன் மீட்பு

பதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2010,04:07 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=106359

கோத்தகிரி : கோத்தகிரி அருகே சிறுத்தைக்கு சுருக்கு வைத்தது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 
நீலகிரி மாவட்டம் வடக்கு வனக்கோட்டம், கட்டபெட்டு வனச்சரகத்தில் கிளப் ரோடு - மிஷன்காம்பவுண்ட் இணைப்பு சாலையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுறுக்கு கம்பியில் சிறுத்தை சிக்கி இருந்தது தெரியவந்தது. வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் எஸ்டேட் காவலாளி ரத்தினம் காட்டு பன்றியை பிடிப்பதற்காக தான் வைத்த சுருக்கு கம்பியில் சிறுத்தை சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் சவுந்திரபாண்டியன் மற்றும் உதவி வன அலுவலர் ஜெயராஜூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுத்தையை உயிருடன் காப்பாற்ற, கால்நடை மருத்துவர் கலைவாணன் மற்றும் புலிகள் காப்பக கள இயக்குனர் ஸ்ரீவத்சவா சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். இதன் பின், சிறுத்தைக்கு மயக்க ஊசி போடப்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த சிறுத்தையின் வயிற்று பகுதியில் இறுக்கியிருந்த சுருக்கு கம்பியை அகற்றி, தயாராக வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டுக்குள் அடைத்து, ஆனைகட்டி வனப்பகுதியில் விடப்பட்டது.
 
புலிகள் காப்பக கள இயக்குனர் ஸ்ரீ வஸ்தவா கூறியதாவது: பிடிபட்ட சிறுத்தை மருத்துவரின் ஆய்வுக்குப்பின், 5 முதல் 7 வயதிற்குள் உள்ள ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. சிறுத்தை பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கு என்பதால், கூண்டில் அடைத்து ஆனைகட்டி வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார். சிறுத்தைக்கு சுருக்கு வைத்த ரத்தினம் (55) கைது செய்யப்பட்டுள்ளார்.