பதிவு செய்த நாள் : 10/24/2010 12:00:52 AM
http://dinakaran.com/masterdetail.aspx?id=18610&id1=15
http://dinakaran.com/masterdetail.aspx?id=18610&id1=15
யானை, இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு என்று மத்திய அரசு பிரகடனம் செய்துள்ளது. இந்த விஷயம் யானைகளுக்கு இன்னும் எட்டவில்லை போலிருக்கிறது. கொண் டாட்டம், அட்டகாசம் என்ற செய்திகள் எதுவும் வரவில்லை. பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கு எனும் கவுரவம் புலிக்கு ஏற்கனவே கிடைத்துள்ளது. அதனால் சிலருக்கு கவலை. தேசிய விலங்காக அறிவிக்கப்பட்ட பின்னரே புலிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்தது என்று நினைக்கின்றனர். இன்றைய தேதியில் 1500 புலிகள் இருப்பதாக தகவல்.
சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் முப்பதாயிரம் இருந்ததாக சொல்கின்றனர். மிகையாக தோன்றுகிறது. யானைகளை பொருத்தவரை ஆசிய கண்டத்தில் பாதிக்கு மேல் நம் நாட்டில். சுதந்திரமாக உலவுபவை 25 ஆயிரம். கோயில்கள் காட்சிசாலைகள் வீடுகள் கம்பெனிகள் ஆகியவற்றில் மனிதனுக்கு அடிமைகளாய் வாழ்பவை நாலாயிரம். தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டு விட்டதால், இனிமேல் யானையை தனியார் சொந்தம் கொண்டாட முடியாது. இருப்பதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மீறி எவராவது ரகசியமாக யானை வளர்த்தால் தண்டனைக்குரிய குற்றம். அரசின் அறிவிப்பு யானைகளுக்கான சுதந்திர பிரகடனம் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் குதூகலிக்கின்றனர். உருவத்தில் மிகப் பெரிய விலங்காக இருந்தாலும் யானை மீது யாருக்கும் பயமில்லை. அதனால் சித்திரவதை செய்ய தயக்கமில்லை. தெருவில் பிச்சை எடுப்பது, காதை செவிடாக்கும் பட்டாசு சத்தம் நடுவே ஆபரணங்கள் சுமந்து நடப்பது, வரிசையில் நின்று கோரசாக பிளிறுவது, உருமி மேளத்துக்கு டான்ஸ் ஆடுவது, நாள் முழுக்க பாரம் தூக்குவது, சுற்றுலா பயணிகளையும் அதிகாரிகளையும் சுமந்து காடு சுற்றி காட்டுவது போன்ற வேலைகளை எந்த யானையும் சுய விருப்பத்தின் பேரில் செய்வதில்லை. யானை உருவம் கொண்ட கடவுளை நேசிப்பவர்கள் மிகுந்த நாட்டில் தந்தத்துக்காக வேட்டையாடி கொல்லும் வீரப்பன்களுக்கும் குறைவில்லை. ரயில் மோதி யானைகள் பலியாவதும் இங்குதான் அதிகம். இனி அதற்கெல்லாம் சரியான தண்டனை கொடுக்க முடியும். யானை இல்லாத பெரிய கோயில்களும் திருச்சூர் பூரம், மைசூர் தசரா போன்ற திருவிழாக்களும் சோபை இழந்துவிடும். என்றாலும், நமது வேடிக்கைக்காக வாயில்லா விலங்குகளை வதைப்பதில் எந்த நியாயமும் இல்லையே.