பதிவு செய்த நாள் 10/22/2010 1:05:12 AM
சென்னை : ஆந்திர மாநிலத்துக்கு காட்டுக் குருவிகளை கடத்த முயன்றவருக்கு 30 மாதம் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
சென்னை கீழ்ப்பாக்கம், குட்டியப்பா கிராமணி தெருவைச் சேர்ந்தவர் முஜித் உசேன் (46). மூர் மார்க்கெட்டில் பறவைகள் விற்பனை கடையை வைத்திருந்தார். 1997ம் ஆண்டு 200 காட்டுக் குருவி, 3 காட்டுக் கோழி ஆகியவற்றை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடந்த முயன்றார்.
அப்போது, அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட பறவைகளை, வேளச்சேரியில் உள்ள வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முஜித் உசேன் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி, நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில், காட்டுக் குருவிகளை கடத்திய முஜித் உசேனுக்கு இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, முஜித் உசேன் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொலைபேசியில் புகார் கொடுங்க
வேளச்சேரி வனச்சரகர் டேவிட்ராஜ் கூறுகையில், ‘‘குறிப்பிட்ட பறவை, விலங்குகளை வீட்டில் வளர்க்கக் கூடாது. அப்படி வளர்ப்பவர்கள் தாமாக முன்வந்து எங்களிடம் ஒப்படைக்கலாம். இல்லாவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக 2220 0335 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.