விலாங்கோம்பையில் மின்சாரம் தாக்கி யானை சாவு தோட்டத்து வேலியில், உயர்மின்சாரம் பாய்ச்சிய விவசாயி கைது
கோபிசெட்டிபாளையம், அக்.1-
http://dailythanthi.com/article.asp?NewsID=597605&disdate=10/1/2010&advt=2
விலாங்கோம்பையில் நிலக்கடலை தோட்டத்துக்குள் நுழைய முயன்ற யானை மின்சாரம் தாக்கி இறந்தது. அதைத்தொடர்ந்து, தோட்டத்து வேலிக்கு உயர்மின்சாரம் பாய்ச்சிய விவசாயியை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மின்சார வேலி
கோபி தாலுகா தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உள்பட்டது விலாங்கோம்பை வனப்பகுதி. இந்த வனப்பகுதியை ஒட்டி ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.தோட்டத்தில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க தோட்டத்தை சுற்றிலும் ஆறுமுகம் மின்சார வேலி அமைத்து உள்ளார்.
அந்த மின்சார வேலியில் உயர்அழுத்த மின்சாரத்தை அவர் பாய்ச்சி இருந்தார். இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி இரவு விலாங்கோம்பை வனப்பகுதியில் இருந்து 16 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று தோட்டத்துக்குள் நுழைய முயன்றது.
யானை சாவு
அப்போது, மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக செத்தது. இதுகுறித்து தூக்கநாயக்கன்பாளையம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, சத்தியமங்கலம் வனக்கோட்ட அதிகாரி ராமசுப்பிரமணியம், வனச்சரகர் தங்கப்பழம், மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி இறந்த யானையின் உடலை கைப்பற்றினார்கள்.
பிறகு, கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே இடத்தில் புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
விவசாயி கைது
இந்தநிலையில் மின்சார வேலியில் உயர்அழுத்த மின்சாரம் பாய்ச்சியதாக ஆறுமுகத்தின் மகன் வடிவேல் (வயது 25) என்பவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பிறகு,அவர் கோபி முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.