தியாகவள்ளி பரவனாற்றில் 25 கொக்குகள் மீட்பு வனத்துறையினர் நடவடிக்கை
கடலூர்,அக்.10-
http://dailythanthi.com/article.asp?NewsID=599647&disdate=10/10/2010&advt=2
தியாகவள்ளி பரவனாற்றில் வலை மூலம் பிடிக்கப்பட்ட கொக்குகளை வனத்துறையினர் மீட்டனர்.
`தினத்தந்தி' செய்தி எதிரொலி
கடலூர் அருகே உள்ள தியாகவள்ளி பகுதியில் சிலர் வனத்துறையினருக்கு தெரியாமல் வலை மூலம் கொக்குகளை வேட்டையாடி அவைகளை அதிக விலைக்கு விற்றுவருகின்றனர். இதனால் கொக்கு இனம் அழிந்து வரும் செய்தியை கடந்த 7-ந் தேதி `தினத்தந்தி' நாளிதழ் வெளியிட்டது. இதனை தொடர்ந்து நேற்று வனசரகர் சீனிவாசன் தலைமையில் வனவர் தேவராஜ், கோட்டகாப்பாளர்கள் ராஜாராம், சுப்பராயலு, கஜேந்திரன், பரமசிவன் ஆகியோர் தியாகவள்ளி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
வனத்துறையினர் நடவடிக்கை
அப்போது பரவனாற்று கரையோரத்தில் சிலர் வலையை வைத்து கொக்குகளை பிடிப்பதை பார்த்ததும் வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். அதற்குள் அவர்கள் வைத்திருந்த 25 கொக்குகள்,வலை மற்றும் பெட்டி ஆகியவற்றை அப்படியே போட்டுவிட்டு தப்பிசென்றனர். பின்னர் கொக்குகளை கைப்பற்றிய வனத்துறையினர் அவற்றை மீண்டும் பறக்க விட்ட னர். இது போன்ற செயல்களில் இனி யாராவது ஈடுபட்டால் அவர்களுக்கு வனவிலங்கு தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படும் என வனசரகர் சீனிவாசன் பொது மக்களிடம் எச்சரிக்கை செய்தார்.