http://dinakaran.com/tamilnadudetail.aspx?id=16971&id1=4
கோவை : கோவையில் கிறிஸ்துநாதர் சர்ச் அசன பண்டிகை நேற்று நடந்தது. இதில் 20 ஆயிரம் பேருக்கு மட்டன் குழம்பு, வாழைக்காய் கூட்டுடன் விருந்து வழங்கப்பட்டது.
கோவை திருச்சி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் சர்ச் நூற்றாண்டு விழா மற்றும் அசன பண்டிகை நேற்று நடந்தது. அப்போது தலைமை போதகர் கருணாகரன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
பின்னர் சர்ச் வளாகத்தில் பிரமாண்டமான பந்தலில் சபை மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு மட்டன் குழம்புடன் சாப்பாடு, வாழைக்காய்க் கூட்டு, பாயசம், ரசத்துடன் பிரம்மாண்டமான விருந்து பரிமாறப்பட்டது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த அசன விருந்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அசன விருந்துக்காக 256 ஆட்டுக்கிடாக்கள் வெட்டப்பட்டன. இதில் கிடைத்த 2500 கிலோ மட்டனை சமைத்தும், 60 மூட்டை அரிசியில் சாதமும் சமைக்கப்பட்டது. 2000 கிலோ துவரம் பருப்பில் சாம்பார் தயாரானது.
இதற்காக தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரத்தில் இருந்து சமையல் கலை நிபுணர் கோயில்பிச்சை தலைமையில் 50 சமையல் கலைஞர்கள் கோவை வந்திருந்தனர். பந்தி பரிமாறும் பணியில் 600 தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை சர்ச் போதகர்கள் அன்பானந்தன், ஏ.சி.நாயகம், பிரபு சந்திரமோகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.