Pages

Thursday, October 14, 2010

வன விலங்குகள் தொட்டால் `ஷாக்' அடிக்கும் மின்வேலி

யானைகள் சேதப்படுத்துவதை தடுக்க விவசாய நிலங்களில் சூரிய சக்தி மின்வேலி வன விலங்குகள் தொட்டால் `ஷாக்' அடிக்கும்

குடியாத்தம்,அக்.15-
http://dailythanthi.com/article.asp?NewsID=600715&disdate=10/15/2010&advt=2

விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்துவதை தடுக்க வனத்துறையினர் சூரிய சக்தி மின்வேலி அமைத்துள்ளனர்.

யானை கூட்டம்

குடியாத்தம் அடுத்து 20 கி.மீ தொலைவில் ஆந்திர மாநில எல்லை உள்ளது. அந்த எல்லை காட்டுப்பகுதியாக உள்ளது. இந்த எல்லை பகுதியையொட்டி மோர்தானா, சைனகுண்டா, தனகொண்டபல்லி ஆகிய கிராமங்கள் உள்ளன.
ஆந்திர மாநில எல்லையில் சில கி.மீ. தூரத்தில் கவுண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது. அந்த சரணலாய பகுதியில் உள்ள யானை கூட்டம் இரவு நேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க மற்றும் உணவு தேடி எல்லை பகுதியில் அமைந்துள்ள மோர்தானா அணை பகுதிக்கு வருகிறது.

பயிர்கள் சேதம்

இதனால் சைனகுண்டா, தனகொண்டபல்லி, கொட்டமிட்டா, ஆம்பூரான்பட்டி, தீர்த்தமலை ஆகிய பகுதிகளில் உள்ள மாதோப்புகள், வாழை தோட்டம், கரும்பு தோட்டங்களில் யானைகள் நுழைந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

இது குறித்து விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர். வனத்துறையினர் யானை கூட்டத்தை தீப்பந்தங்களை ஏந்தியும், தாரை, தப்பட்டங்கள் அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் யானை கூட்டத்தை விரட்டி வந்தனர்.

சூரிய சக்தி மின்வேலி

ஆனால் மீண்டும் யானை கூட்டம் பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். வனத்துறையினர் தனகொண்டபல்லி பகுதியில் சுமார் ரூ. 6 லட்சம் மதிப்பிட்டில் 3.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சூரியசக்தி மின்வேலி அமைத்தனர்.

இந்த மின்வேலி அமைத்த பணிகளை தலைமை வனபாதுகாவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் சுந்தர்ராஜன், வேலூர் மண்டல வன பாதுகாவலர் ஏ.வி.வெங்கடாசலம், மாவட்ட வன அலுவலர் டி.வி.மஞ்சுநாதா ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த சூரியசக்தி மின்வேலி பயன்பாடு குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பாதிப்பு இல்லை

இந்த மின் வேலி 9.5 வாட்ஸ் மின்சக்தி கொண்டது. இந்த மின்வேலியை தொடும் யானைகள், மான்கள், காட்டுபன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு ஷாக் அடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தும். இதனால் வனவிலங்குகள் பயந்து கொண்டு மீண்டும் வேலி அருகே வராது. ஷாக் அடிக்கும் போது வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாது. தற்செயலாக கிராம மக்கள் மின்வேலியை தொட்டு விட்டால் ஷாக் அடிக்கும் .ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.