Pages

Sunday, September 26, 2010

சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டித்தரும் கல்லூரி விரிவுரையாளர்

செப்டம்பர் 26,2010,23:56 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=93592

சண்டிகார் : ஜலந்தர் கல்லூரியில் பணியாற்றி வரும் விரிவுரையாளர் ஒருவர், சிட்டுக் குருவிகளுக்காக கூடுகளை உருவாக்கி, வினியோகித்து வருகிறார்.

நகரங்கள் மட்டுமல்லாது ஊரகப் பகுதிகளிலும், தற்போது மொபைல்போன் கோபுரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு,சிட்டுக்குருவி,தேனீக்கள் உள்ளிட்ட உயிரினங்களை கடுமையாக பாதிக்கிறது. இதன் காரணமாக, சிட்டுக் குருவிகள் இனம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருப்பதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.       பஞ்சாப் மாநிலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,  கடந்த 10 ஆண்டுகளில், சிட்டுக் குருவிகள் 70 முதல் 80 சதவீதம் வரை அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.சிட்டுக் குருவிகளை பாதுகாக்க, தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் களத்தில் குதித்துள்ளனர்.

சிட்டுக் குருவிகள், வயல்காட்டில் மட்டுமல்லாமல், வீடுகளிலும் கூடுகட்டி வாழ்பவை. தற்போது, விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் உருவாகி  வருவதால், சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கும் இடமில்லாமல் போகின்றன.இதை கருத்தில் கொண்டு, சமூக ஆர்வலர்கள் சிட்டுக் குருவிகளுக்கு கூடுகளை உருவாக்கி வழங்கி வருகின்றனர்.ஜலந்தரில், கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வரும் சந்தீப் சாகால், மரத்தாலான சிட்டுக் குருவிகளின் கூடுகளை உருவாக்கி, பறவை ஆர்வலர்களுக்கு வழங்கி வருகிறார்.

இதுவரை 350 க்கும் மேற்பட்ட கூடுகளை செய்து அவர் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:பஞ்சாபில், மொபைல்போன் டவர்களால் சிட்டுக்குருவி இனம் தற்போது,அழிவின் விளிம்புக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதுதவிர, தற்போது, விவசாயத்தில், பூச்சிக்கொல்லி உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை உண்ணும் பறவைகளும் அழிகின்றன. மேலும், பறவைகளுக்கு இயற்கையான வசிப்பிடங்கள் கிடைப்பதும் வெகுவாக குறைந்து வருகிறது.எனவே, சிட்டுக் குருவிகளுக்காக, மரத்தாலான  கூடுகளை  நானே செய்து, பறவையின  ஆர்வலர்களுக்கு அளித்து வருகின்றேன்.  இதை வாங்கி, வீடுகளிலோ, தோட்டங்களிலோ  வைக்கும் போது, சிட்டுக்குருவிகள் வந்து அதில் தங்கும். அவற்றிற்கு பாதுகாப்பான இருப்பிடம் கிடைக்கும்.இதை நானே செய்ய கற்றுக்கொண்டு,வாரத்திற்கு 10கூடுகள் வரை செய்து தருகிறேன்.மேலும்,சிட்டுக் குருவிகள் அழிவு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு சந்தீப் சாகால் கூறினார்.