http://dinakaran.com/chennaidetail.aspx?id=15795&id1=9
பதிவு செய்த நாள் 9/20/2010 12:13:44 AM
சென்னை : கறிக்காக பிராய்லர் கோழிகளையும், முட்டைக்காக ஒயிட் லகான் கோழிகளையும் வளர்க்கின்றனர். உலக அளவில் இந்தியா முட்டை உற்பத்தியில் 3வது இடமும், கறிக்கோழி உற்பத்தியில் 4வது இடமும் பெற்றுள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 3 கோடியே 25 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பிராய்லர் கோழி, ஒயிட் லகான் கோழிகளை விட நாட்டுக் கோழிகளையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால், நாட்டுக் கோழிக்கு எப்போதுமே தட்டுப்பாடு உள்ளது. கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறைந்ததே இதற்கு காரணம். இதைப்போக்க கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் புதிய முயற்சி எடுத்துள்ளது. அதன்படி, கலப்பின நாட்டுக்கோழி உருவாக்கப்பட்டு வருகிறது.
அதாவது, அமெரிக்காவின் ‘ரோடு ஐலேண்ட்’ தீவில் வசிக்கும் சிவப்பு போந்தா கோழியையும், மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்துள்ள ஒயிட் லகான் கோழியையும் இணைத்து கலப்பின முறை மூலம் புதிய நாட்டுக்கோழியை கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது. இந்த கலப்பின உற்பத்திக்கான 5வது தலைமுறை இப்போது நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் இந்த புதிய நாட்டுக்கோழி அறிமுகப்படுத்தப்படும்.
இதுகுறித்து, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்
பிரபாகரன் கூறியதாவது:
நாட்டுக்கோழி ஆண்டுக்கு 60 முட்டைகளும், ஒயிட் லகான் கோழி 320 முட்டைகளும் இடும். இப்போது, உருவாக்கப்படும் புதிய கோழி ஆண்டுக்கு 220 முட்டைகள் இடும் திறன் கொண்டது. இவை சாதாரண நாட்டுக்கோழி முட்டையை போன்று பழுப்பு நிறத்தில் இருக்கும்.நாட்டுக்கோழியை போல் நிறமும், எடையும் சற்று அதிகமாக இருக்கும். புரத சத்தும் ஒரே அளவில் இருக்கும். கறியும், நாட்டுக்கோழி போன்றே சுவையாக இருக்கும்.
நாட்டுக்கோழி கறி மற்றும் முட்டை தட்டுப்பாட்டை போக்கவே இந்த புதிய கோழி உருவாக்கப்படுகிறது. எனவே, இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். கலப்பினத்தில் ஈடுபடுத்தக்கூடிய சிவப்பு போந்தா கோழிகள், எப்போதும் மந்தமாக நின்ற இடத்திலேயே இருக்கும். யார் வேண்டுமானாலும் பிடித்து விடலாம்.
இதை ஒயிட் லகான் கோழிகளுடன் இணைப்பதால், உருவாகக்கூடிய புதிய நாட்டுக்கோழி படு சுறுசுறுப்பாக இருக்கும். யாராலும், அவ்வளவு எளிதாக பிடிக்க முடியாது. இந்த புதிய கோழியை அடுத்த ஆண்டு முதல் சாப்பிடலாம். இவ்வாறு பிரபாகரன் கூறினார்.
முட்டை... சைவமா? அசைவமா?
எந்த கோழியாக இருந்தாலும், பருவம் வந்தவுடன் அதன் வயிற்றில் தானாகவே முட்டைகள் உற்பத்தியாகும். இந்த முட்டைகள் வளர்ச்சி அடைந்து தானாகவே வெளிவரும். கரு (உயிரணு) இருக்காது. இந்த முட்டைகளை தான் ‘சைவ முட்டை’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒயிட் லகான் கோழிகள் இதுபோலதான் முட்டைகளை இடுகின்றன.
கோழி சேவலுடன் (ஆண் கோழி) கலவையில் ஈடுபட்ட பின்பு உருவாகும் முட்டையில் கரு (உயிரணு) இருக்கும். இந்த முட்டைகள் தான் குஞ்சு பொறிக்கும் தன்மை கொண்டது. இவற்றை ‘அசைவ முட்டைகள்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
கோழி சேவலுடன் (ஆண் கோழி) கலவையில் ஈடுபட்ட பின்பு உருவாகும் முட்டையில் கரு (உயிரணு) இருக்கும். இந்த முட்டைகள் தான் குஞ்சு பொறிக்கும் தன்மை கொண்டது. இவற்றை ‘அசைவ முட்டைகள்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.