Pages

Saturday, September 11, 2010

ரவிசங்கர் ஆசிரம துப்பாக்கி சூடு

ரவிசங்கர் ஆசிரம துப்பாக்கி சூடு சம்பவம்: சுட்டவரை கண்டுபிடித்தது கர்நாடக போலீஸ்



பதிவு செய்த நாள் : ஜூன் 05,2010,22:15 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=13293

பெங்களூரு : வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீடித்த மர்மம், தற்போது விலகியுள்ளது. ஆசிரமத்தின் அருகிலுள்ள பண்ணையின் உரிமையாளர், தெரு நாய்களை பயமுறுத்த சுட்ட குண்டுதான் ஆசிரமத்தில் இருந்தவர் மீது பாய்ந்துள்ளது என, போலீசார் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் 30ம் தேதி, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், பெங்களூரில் உள்ள தனது ஆசிரமத்தில் மாலை 6 மணியளவில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, வெளியே கிளம்பிய போது, எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு, ரவிசங்கர் அருகில் நின்றிருந்த இளைஞர் தொடையில் பாய்ந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "கொலை முயற்சியில் ரவிசங்கர் உயிர் தப்பினார்' என, செய்திகள் வெளியாயின.

இதுகுறித்து பேட்டியளித்த கர்நாடக மாநில டி.ஜி.பி.,யும், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமும், "தாக்குதல், ரவிசங்கரை குறிவைத்து நடத்தப்படவில்லை. அவரின் ஆசிரமச் சீடர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலே இதற்கு காரணம்' என, தெரிவித்தனர். இச்செய்தி தங்களின் கோடிக்கணக்கான பக்தர்களின் மனங்களை புண்படுத்தி விட்டதாகத் தெரிவித்த ஆசிரம நிர்வாகம், நடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து உண்மையை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

இதன்பின் போலீசார் நடத்திய விசாரணைக்குப் பின், நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக டி.ஜி.பி., அஜய் குமார் சிங் கூறியதாவது: ரவிசங்கர் ஆசிரமத்திற்கு எதிர் திசையில் ஒரு பண்ணை வீடு உள்ளது. அம்பேத்கர் பல் மருத்துவ கல்லூரியின் சேர்மன் டாக்டர்.மகாதேவ பிரசாத் தான் இதன் உரிமையாளர். அவரின் பண்ணை வீட்டிலிருந்த செம்மறியாட்டை அங்கு திரிந்து கொண்டிருந்த தெருநாய்கள் கடித்துக் குதறிவிட்டதால், அவற்றை பயமுறுத்த மகாதேவ பிரசாத், தன் 0.32 மி.மீ., துப்பாக்கியால் நாய்களை நோக்கிச் சுட்டுள்ளார். துப்பாக்கியில் இருந்து மொத்தம் இரண்டு குண்டுகள்தான் வெளியேறியுள்ளன. அவருக்கும், ஆசிரமத்துக்கும் இடையில் 2,200லிருந்து, 2,500 அடி தொலைவு உள்ளது. அவரது பண்ணையிலிருந்து ஆசிரமம் தெளிவாகத் தெரியாது. இரண்டு குண்டுகளில் ஒரு குண்டு, ஆசிரம வளாகத்துக்குள் நுழைந் துள்ளது. அவர் துப்பாக்கி உரிமம் பெற்றிருப்பதாலும், அவருக்கு ரவிசங்கரை தாக்கவேண்டும் என்ற உள்நோக்கம் எதுவும் இல்லாததாலும் அவர் கைது செய்யப்படவில்லை. இவ்வாறு அஜய் குமார் சிங் தெரிவித்தார்.

இந்த அறிக்கையை வரவேற்றுள்ள ஆசிரம நிர்வாகி நரேந்திர லம்பா, ""போலீசாரின் விரைந்த நடவடிக்கைகளை வரவேற்கிறோம். இப்போது பிரச்னைகள் நீங்கி விட்டன,'' என்றார். ரவிசங்கரின் தனிச் செயலர் கிரிகோவிந்த் இதுபற்றிக் கூறுகையில், "இந்த விசாரணையில் நாங்கள் திருப்தி அடைந்துள்ளோம். "அதிகாரப்பூர்வ அறிக்கையை நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். விசாரணை நடத்தாமலேயே சம்பவத்துக்கு இதுதான் காரணம் என்று போலீசார் சொன்னதற்குத் தான் மறுப்பு தெரிவித்தோம். அவர்கள் விசாரணை நடத்தும் முறைக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. "சீடர்களுக்கு இடையில் தகராறு என்ற, மத்திய உள்துறை அமைச்சரின் அறிக்கை சரியானதல்ல என்பதையும் இந்த விசாரணை நிரூபித்து விட்டது' என்றார்.