http://www.dinamalar.com/News_Detail.asp?Id=88068
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010,06:02 IST
ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடலில் கடல் அட்டை பிடிக்கும் மீனவர்களின், அடையாள அட்டைகள் ரத்து செய்யப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவில், கடல்வாழ் உயரினங்கள் வேட்டையாடப்படுவது தொடர்கிறது. வனத்துறை, வளைகுடா உயிர்கோள காப்பாக அறக்கட்டளை, கடலோர காவல்படை, கடற்படையினர் ரோந்தையும் மீறி, கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இக்கடத்தல் பின்னணியில், மீனவர்கள் சிலர் இருப்பதே இதற்கு காரணம். கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போர்வையில், மறைமுகமாக தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை அபகரிக்கும் கும்பல் சமீப காலமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக தடையில் உள்ள கடல் அட்டைகள் சேகரிப்பில், உலக அளவில் பெரிய "நெட்வொர்க்' நடந்து வருகிறது. இதற்கு வனத்துறையினரும் முழு அளவில் உதவி வருகின்றனர். இதற்காக எவ்வளவு முதலீடு செய்தாலும், கடல் அட்டை சேகரிப்பு என வரும் போது, அதில் மீனவர்களின் பங்கு மட்டுமே தேவைப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம், தூத்துக்குடி பகுதி மீனவர்களை கடத்தல் கும்பல் பயன்படுத்தி வருகிறது. சந்தேகத்தை திசை திருப்பும் விதமாக மீனவ பெண்களையும் இதில் பயன்படுத்தி வருகின்றனர். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் , கடல் அட்டை சேகரிப்பில் மீனவர்கள், ஈடுபட்டால் அவர்களின் அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ராமநாதபுரத்தில் நடந்த கடலோர பாதுகாப்பு கூட்டத்தில் கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்தார்.