Pages

Friday, September 24, 2010

3 எருமை மாடுகள் பலி

செண்பகராமன்புதூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 3 எருமை மாடுகள் பலி

ஆரல்வாய்மொழி, செப்.25-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=596270&disdate=9/25/2010&advt=2

செண்பகராமன்புதூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 3 எருமைமாடுகள் பலியாயின.

மின்கம்பி அறுந்தது

ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன்புதூர் நடுத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 42). இவர் 12 எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். அவற்றை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும்போது பக்கத்து வீடுகளில் உள்ள சில மாடுகளையும் அழைத்துச் செல்வது வழக்கம்.

அதேபோல நேற்று காலையில் எருமைமாடுகளை மேய்ச்சலுக்காக அவ்வையாரம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோப்பிற்கு அழைத்துச் சென்றார். அங்கு எருமைமாடுகளும் கும்பலாக மேய்ந்து கொண்டிருந்தன.

மதிய வேளையில் திடீரென்று பலத்த காற்று வீசியது. அப்போது அந்த பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பி மீது தென்னை மர மட்டை முறிந்து விழுந்தது. இதில் மின்சார கம்பிகள் உரசி அறுந்து விழுந்தன.

3 மாடுகள் பலி

அப்போது அந்த மின்சார கம்பி மேய்ந்து கொண்டிருந்த ஒரு எருமை மாடுமீது விழுந்தது. உடனே அலறியபடி அந்த எருமை மாடு கீழே விழுந்து இறந்தது. எருமைமாட்டின் சப்தம் கேட்கவே, அருகில் நின்ற 2 எருமை மாடுகள் ஓடிச்சென்று கீழே விழுந்து கிடந்த எருமைமாட்டை நாக்கால் வருடியது. இதில் அந்த 2 எருமைமாடுகள் மீதும் மின்சாரம் பாய்ந்து அவைகளும் இறந்தன.

இதை பார்த்துக்கொண்டிருந்த இசக்கியப்பன் மற்ற மாடுகளை அந்த பக்கம் செல்லவிடாமல் தடுத்து வெளியே ஓட்டிவந்தார். அதனால் மற்ற அனைத்து எருமை மாடுகளும் தப்பின. இதுபற்றி மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.