பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2010,00:03 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=84681
செஞ்சி : செஞ்சியில் ஆஞ்சநேய பக்தர் ஒருவர் 40 ஆண்டுகளாக குரங்குகளுக்கு உணவு சேகரித்து வழங்கி வருகிறார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை உள்ளே மலையும், காடுகளும் சூழ்ந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கில் குரங்குகள் உள்ளன. பக்தர்கள், குரங்குகளுக்கு பழங்கள், தின்பண்டங்களை கொடுக்கின்றனர்.
பகலில் பக்தர்கள் உணவளித்தாலும், அதிகாலையில் பசியோடு இருக்கும் குரங்குகளுக்கு செஞ்சி எம்.ஜி.ஆர்., நகரில் வசிக்கும் 80 வயது ஆஞ்சநேய பக்தர் பார்த்தசாரதி, கடந்த 40 ஆண்டுகளாக உணவு அளித்து வருகிறார். இவருக்கு சொந்த ஊர் செஞ்சி தாலுகா பெரும்புகை கிராமம். தனது இளம் வயதில் செஞ்சிக் கோட்டையில் நடந்த சீரமைப்பு பணிக்கு கூலி வேலைக்கு வந்தார். அப்போது ஆஞ்சநேயர் கோவிலுக்கு ஒற்றையடி பாதையாகவும், பக்தர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவும் இருந்தது. ஆஞ்சநேயர் பக்தரான பார்த்தசாரதி தினமும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூஜைகளை செய்தார். சில ஆண்டுகளில் குரங்குகள் மீது பரிவு ஏற்பட்டு, கோவிலுக்கு செல்லும் போது வீட்டில் இருந்து தன்னால் முடிந்த உணவை குரங்குகளுக்கு கொண்டு சென்றார்.
நாளடைவில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பின், மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை பழக்கடை, காய்கறி கடைகளில் விற்பனையில் இருந்து ஒதுக்கி வைக்கும் பழம், காய்கறிகளையும், பேக்கரியில் வீணாகும் பிஸ்கட்டுகளையும் சாக்குப்பையில் சேகரிக்கிறார். இவற்றுடன், வீட்டில் சமைக்கும் உணவுடன் அதிகாலை 6 மணிக்கு கோவிலுக்கு எடுத்து வருகிறார். அங்கு, இவர் எழுப்பும் ஒலியை கேட்டு மலையில் இருந்து குரங்குகள் கூட்டமாக வருகின்றன. சூழ்ந்து கொள்ளும் குரங்குகளைக் கண்டு சற்றும் பதட்டமில்லாமல், பழங்களையும், தின்பண்டங்களையும் வினியோகம் செய்கிறார். பின், கோவிலுக்குச் சென்று பூஜை செய்கிறார். கடந்த 40 ஆண்டுகளில் ஒரு நாள் கூட தடை இல்லாமல் இதை செய்துள்ளார்.
ஒரு முறை காசிக்கு யாத்திரை சென்ற போது இவரது மகன் திருமலை (40), இந்த பணியை செய்தார். கண்பார்வை மங்கி வருவதால், மகன் திருமலையை இப்போது உதவிக்கு அழைத்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (65) எந்தவிதமான சலிப்பும் இல்லாமல் குரங்குகளுக்கு உணவு சமைத்து தருவதையும், செஞ்சி கடைவீதியில் பழக்கடை நடத்தும் முஸ்லிம்கள் முக சுளிப்பில்லாமல் பழங்களை சேகரித்து வைத்திருந்து தருவதையும் பார்த்தசாரதி பெருமையாக குறிப்பிடுகிறார். தனது இறுதி மூச்சு வரை குரங்குகளுக்கு உணவு வழங்குவதை நிறுத்தமாட்டேன் என உறுதியாக கூறுகிறார் பார்த்தசாரதி. குரங்குகள் மீது இவர் காட்டும் பரிவும், அக்கறையும் இங்கு வரும் பக்தர்கள் மத்தியில் இவர் மீது தனி மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தி உள்ளது.