செப்டம்பர் 25,2010,23:50 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=92942
லண்டன்:பின்லாந்து நாட்டில் உள்ள மிருகக் காட்சி சாலையில் பனிக்கரடி ஒன்று தினமும் 15 நிமிடங்கள் யோகா செய்கிறது. இதை பார்வையாளர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.பின்லாந்து நாட்டில் உள்ள அட்டாரி மிருகக் காட்சி சாலையில், "சான்ட்ரா' என்ற ஆண் பனிக்கரடி ஒன்று உள்ளது.அந்த கரடி தினசரி காலை எழுந்ததும், 15 நிமிடங்கள் யோகா செய்கிறது. அது கால்களை நீட்டியும், கைகளை தரையில் ஊன்றியும், கண்களை ஒரே இடத்தில் நிலை நிறுத்தி யோகா செய்கிறது. பின்னர், கால்களை உயர்த்தி, கைகளால் காலை தொடுகிறது. பின்னர், கால்களை உயரே தூக்குகிறது. பார்வையாளர்களை வியக்க வைக்கும் வகையில், பல்வேறு கோணங்களில், கரடி செய்யும் இந்த யோகா பயிற்சி 15 நிமிடங்கள் வரை நீடிக்கிறது.இந்த அரிய காட்சிகளை பார்ப்பதற்கு, அந்த மிருகக் காட்சி சாலையில் தினமும் பெரும் கூட்டம் கூடுகிறது. ஆன்மிகம் சார்ந்த உடற்பயிற்சியான யோகாவை, கரடி எப்படி கற்றுக்கொண்டது என்றும், அதைப் பற்றி அதற்கு என்ன தெரியும் என்றும் பார்வையாளர்கள் வியப்போடு கேள்வி எழுப்புகின்றனர்.