பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது:சிங்கம், புலிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரப்பா வலியுறுத்தல்
பெங்களூர், செப்.21-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=595411&disdate=9/21/2010&advt=2
பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலிகளின் இறப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பெங்களூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரப்பா கூறினார்.
ஆர்ப்பாட்டம்
பெங்களூர் நகர இளைஞர் காங்கிரஸ் சார்பில், பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலிகள் இறப்பு சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மல்லேஸ்வரத்தில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரப்பா, பெங்களூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சோமசேகர், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் மனோகர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வனத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பசுவதை தடை சட்டம்
இதைதொடர்ந்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் புலிகள், சிங்கங்கள் தொடர்ந்து இறந்து வருகின்றன. இந்த இறப்பு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி கடந்த 15 நாட்களுக்கு முன்பு வனத்துறை அதிகாரிகளிடம் நாங்கள் மனு வழங்கினோம்.
இந்த நிலையில் நேற்று கூட ஒரு புலி இறந்துபோய் உள்ளது. கர்நாடக அரசு பசுவதை தடை சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஆனால் அந்த சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. புலிகள் மற்றும் சிங்கங்கள் போன்ற மிருகங்கள் பசு மாடுகள் போன்றவற்றின் மாமிசத்தை தான் சாப்பிடுகின்றன.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில், அந்த காட்டு மிருகங்களுக்கு பசு மாடுகளின் மாமிசம் வழங்குவதை அரசு நிறுத்தி இருக்கிறது. புல்லை தான் அவைகளுக்கு போடுகிறார்கள். இப்படி செய்தால் அந்த மிருகங்கள் எப்படி உயிர் வாழும்?. பன்னரகட்டா பூங்காவில் சிங்கம், புலிகள் தொடர்ந்து இறந்து வருவதற்கு இது தான் முக்கிய காரணமாகும்.
எனவே, பன்னரகட்டா பூங்காவில் சிங்கம், புலிகள் இறப்பை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வனத்துறை அலுவலகத்தை நாங்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு ராமச்சந்திரப்பா கூறினார்.