நோய் பரவும் அபாயம்
கடலூர்,செப்.15-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=594070&disdate=9/15/2010&advt=2
கெடிலம் ஆற்றங்கரை ஓரத்தில் செத்து கிடக்கும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
5000 பன்றிகள்
கடலூரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பன்றிகாய்ச்சல் பீதியால் கடலூர் பகுதியில் சுற்றி திரியும் பன்றிகள் அனைத்தையும் அழிக்கவேண்டும் என பொது மக்கள் நகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். அதன் பின் நகராட்சி கூட்டத்தில் பன்றிகளை அழிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கென தனி குழுக்களும் அமைக்கப்பட்டது. அதை அடுத்து அந்த குழுவினர் பன்றிகளை அகற்ற முற்பட்டபோது பன்றிகளை வளர்ப்போர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி தொடங்கிய அன்றே நிறுத்தப்பட்டது. இதனால் பன்றிகளின் எண்ணிக்கை கடலூரில் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது கெடிலம் ஆற்றங்கரை ஓரம், புதுப்பாளையத்தில் இருந்து உண்ணாமலை செட்டி சாவடி வரை சுமார் 5000 பன்றிகள் சுற்றி திரிகின்றன. மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவைகளை சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் வளர்த்து வருகின்றனர்.
தூர்நாற்றம்
இந்நிலையில் புதுபாளையம் பகுதியில் நேற்று பயங்கர தூர்நாற்றம் வீசியது. ஏன் இப்படி நாற்றம் அடிக்கின்றது என்று அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் பகவந்தசாமி மடத்துக்கு பின்னால் உள்ள கெடிலம் ஆற்றங்கரை ஓரத்தில் சென்று பார்த்தபோது அங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட பன்றிகள் அங்கும் இங்குமாக செத்து கிடந்தன இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி பன்றி வளர்ப்பவர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாது:-
புதுப்பாளையத்தில் சுமார் 30 வீடுகளை சேர்ந்தவர்கள் பட்டிகளை வைத்து பன்றிகளை வளர்த்து வருகின்றோம். இதன் மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக எங்களது பன்றிகளின் கண்களில் நீர் பொங்கி வருகிறது அதன் பின் அப்படியே செத்து செத்து விழுகின்றன. இது என்ன நோய் என்றும் எங்களுக்கு தெரியவில்லை.மேலும் செத்த பன்றிகளின் உரிமையாளர்கள் சிலர் மட்டுமே அதனை புதைக்கின்றனர் இன்னும் சிலர் அதனை அப்படியே இழுத்து சென்று கெடிலம் ஆற்றுக்குள் போட்டு விடுகின்றனர்.
செத்த பன்றிகள்
பலர் பன்றிகளை புதைக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட பன்றிகள் அழுகி தூர்நாற்றம் வீசுவதோடு மற்ற பன்றிகளுக்கும் இந்நோய் பரவிவருகின்றது. இது பற்றி சம்மந்த பட்டவர்களிடம் சொன்னால் செத்த பன்றி எங்களுடையது இல்லை என்று மழுப்பி விடுகின்றனர். எங்களால் இந்த தூர்நாற்றத்தில் சரியாக சாப்பிட கூட முடிவில்லை எனவே எங்களுக்கு மாற்று வேலை ஏதாவது அரசு செய்து கொடுத்தால் நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார். பன்றிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய் பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பன்றிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய் பற்றி அறிய அதனுடைய ரத்த மாதிரி தேவை படுகிறது. ஆனால் ரத்த மாதிரி எடுக்க அந்த பகுதி மக்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.
விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
100-க்கும் மேற்பட்ட பன்றிகள் அந்த பகுதியில் செத்து கிடக்கின்றன அப்படி இருந்தும் தங்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுவிடுமோ என்று பயந்துபோய் இது சம்பந்தமாக எங்களுக்கோ அல்லது நகராட்சிக்கோ இது வரை எந்த தகவலும் அவர்கள் தெரிவிக்கவில்லை இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டால் பலருக்கு காய்ச்சல் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்கள் நமக்கு பன்றி காய்ச்சல் ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்று பீதியடைந்து வருகின்றனர்.
மாற்று வேலை
எனவே பன்றிகளுக்கு வந்த நோய் மனிதர்களுக்கும் பரவும் முன் பன்றிகளை சுகாதாரமான முறையில் வளர்க்க உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது பன்றிகள் வளர்ப்பவர்களுக்கு மாற்று வேலை ஏதாவது அரசு ஏற்படுத்தி கொடுத்து பன்றிகளை முழுமையாக அழிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.