Pages

Sunday, August 29, 2010

தோட்டத்தில் புதைக்கப்பட்ட விலங்குகளின் எலும்புகள் சிக்கின


சிவகிரி வனப்பகுதியில் வேட்டையாடிய 2 பேர் துப்பாக்கியுடன் தலைமறைவு ஆயுதங்கள், துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்

http://www.dailythanthi.com/article.asp?NewsID=590694&disdate=8/30/2010&advt=2

சிவகிரி, ஆக.30-

சிவகிரி வனப்பகுதியில் வேட்டையாடிய 2 பேர் துப்பாக்கியுடன் தலைமறைவாகி உள்ளனர். வேட்டையாடப்பட்ட விலங்குகளின் எலும்புக்கூடுகள் ஒரு தோட்டத்தில் குவியலாக சிக்கின. அந்த தோட்டத்து பம்பு-செட்டில் பதுக்கப்பட்ட ஆயுதங் கள், துப்பாக்கி தோட்டாக்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வனவிலங்குகள் வேட்டை

நெல்லை மாவட்டம் சிவகிரிக்கு மேற்கே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்ளது. அதன் அடிவாரத்தில் கோம்பையாற்று வனப்பகுதியில், அவ்வப்போது வனவிலங்குகளை சமூக விரோதிகள் வேட்டையாடி வருகின்றனர். இதை தடுக்க வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கோம்பையாற்று வனப்பகுதியில் வனவிலங்குகளை ஒரு கும்பல் வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் அம்புரோசுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில், சிவகிரி வனச்சரகர் சாமுவேல் சாலமன் ராஜன் தலைமையில் வனத்துறையினரும், ராஜபாளையம் அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுத்துரை தலைமையில் போலீசாரும் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

எலும்பு குவியல்

கோம்பையாற்று பகுதியில் கன்னிமாரியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு தென்னந்தோப்பில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு இடத்தை தோண்டி பார்த்தபோது, அங்கு மான், மிளா உள்ளிட்ட வனவிலங்குகளின் எலும்புகள் குவியலாக புதைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்த தோட்டத்தில் உள்ள பம்பு செட் அறையிலும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அறை பூட்டிய நிலையில் கிடந்ததால், சிவகிரி கிராம நிர்வாக அலுவலர் ஷாகுல்அமீது வரவழைக்கப்பட்டார். அவரது முன்னிலையில் பம்பு செட் கதவு திறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

துப்பாக்கி தோட்டாக்கள்
 
அப்போது அறைக்குள் துப்பாக்கி தோட்டா உள்பட வெடி மருந்துகள் பதுக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துப்பாக்கி தோட்டாக்கள் 3, வெற்றுத் தோட்டாக்கள் 25 மற்றும் வெடி மருந்து, மின்சார ஒயர்கள், அரிவாள், கத்தி போன்ற ஆயுங்களும் இருந்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தியபோது அந்த தோட்டம், சிவகிரி அய்யா கோவில் சந்திப்பு பகுதியை சேர்ந்த பொம்மி மாரியப்பதேவர் மகன் செல்வம் (வயது 40) என்பவருக்கு சொந்தமானது, என்பது தெரியவந்தது.
 
துப்பாக்கியுடன் தலைமறைவு

செல்வமும், அவருடைய கூட்டாளியான நெல்லையை சேர்ந்த மூக்கையா மகன் நயினாரும் (35) சேர்ந்து, மான், மிளா, முயல், வரையாடு உள்பட வனவிலங்குகளை வேட்டையாடியது அம்பலமாகி உள்ளது. வேட்டையாடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கியுடன் அவர்கள் 2 பேரும் தலைமறைவாகி உள்ளனர்.அவர்களை வனத்துறையினரும், அதிரடிப்படை போலீசாரும் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
 
சிவகிரி வனப்பகுதியில் வேட்டையாட முயன்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகிரி வன அலுவலர் சாமுவேல் சாலமன் ராஜன் எச்சரித்து உள்ளார்.