நூற்றாண்டு விழாவுக்கு தயாராகிறது தெப்பக்காடு யானைகள் முகாம்
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010,23:16 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=61535
Dinamalar Online Edition
கூடலூர் :சுற்றுலா பயணிகள் மனம் கவர்ந்த, தெப்பக்காடு யானைகள் முகாம் நூற்றாண்டு விழா கொண்டாட தயாராகி வருகிறது.பிரசித்தி பெற்ற முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வன விலங்குகள், உயிரினங்கள், பறவைகளை கண்டு ரசிக்க, உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள தெப்பக்காட்டில் யானைகள் முகாம் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், இங்கிருந்த விலை உயர்ந்த தேக்கு, ஈட்டி மரங்களை வெட்டி செல்லவும், வாகனங்களில் ஏற்றவும் யானைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை தங்குவதற்காக, 1910ம் ஆண்டு தெப்பக்காட்டில், யானைகள் முகாம் ஏற்படுத்தப்பட்டது.துவக்கத்தில் 40 யானைகள் வரை, இங்கு பராமரிக்கப்பட்டன. பிறகு, வன அழிவை தடுக்கும் நோக்கத்துடன், மரங்கள் வெட்ட தடை விதிக்கப்பட்டது. எனினும், யானைகள் முகாம் மட்டும் தொடர்ந்து செயல்படுகிறது.கூடலூரில் 13 பேரை கொன்ற மக்னா யானை, தெப்பக்காடு முகாமில் பெற்ற பயிற்சிக்கு பின், தற்போது சாதுவாக வலம் வருகிறது. கோவில் யானைகளுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கும் அரசின் திட்டமும், இந்த முகாமில் தான் செயல்படுத்தப்பட்டது.
கடந்த 2006ம் ஆண்டு, தாயை பிரிந்து காட்டில் தனியாக தவித்த மசினி, மே மாதம் தாயை இழந்து காட்டில் தவித்த செம்மொழியான் ஆகிய இரு குட்டி யானைகள், தற்போது இம்முகாமில் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. முகாம் யானைகளை பார்ப்பதற்காக, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இங்குள்ள ஆண் யானைகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, "கும்கி'யாக மாற்றி, சுற்றுலா பயணிகள் சவாரிக்கும், வன ரோந்து பணிக்கும் பயன்படுத்துகின்றனர். ஊருக்குள் வரும் யானைகளை விரட்டவும், பயிற்சி பெற்ற யானைகளை பயன்படுத்தி வருகின்றனர். 58 வயது நிறைவடைந்தால், முகாம் யானைகளுக்கு பணி ஓய்வு அளித்து பராமரிக்கின்றனர். முன்பு, முகாம் யானைகள் மூலம், அங்குள்ள விநாயகர் கோவிலில், மாலையில் தினமும் பூஜை நடத்தப்பட்டது.
தற்போது விநாயர் சதுர்த்திக்கு மட்டும் யானைகள் பூஜைக்கு பயன்படுத்தபடுகின்றன. தற்போது இந்த முகாமில், 2 (ஆண், பெண்) குட்டி யானைகள், 14 ஆண் யானைகள், 6 பெண் யானைகள், 2 மக்னா (தந்தமில்லாத ஆண்) யானைகள் என, மொத்தம் 24 யானைகள் உள்ளன. இதில், 7 கும்கி யானைகள். மேலும், சில யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.வனத்துறையினர் மற்றும் பாகன்களின் சிறப்பான பராமரிப்பு, மருத்துவ சிகிச்சை போன்றவற்றில் சிறப்பு பெற்று வரும் தெப்பக்காடு யானைகள் முகாம் துவங்கி, 100 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. விரைவில், நூற்றாண்டு விழாவை கொண்டாட, வனத்துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.