பசுவதை தடை சட்டத்தை கண்டித்து வருகிற 24-ந் தேதி ஆர்ப்பாட்டம்
பெங்களூரில் நடக்கிறது
பெங்களூர், ஆக.21-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=588580&disdate=8/21/2010&advt=2
பசுவதை தடை சட்டத்தை எதிர்த்து வருகிற 24-ந் தேதி பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பசுவதை தடுப்பு சட்ட எதிர்ப்பு இயக்கம் அறிவித்து இருக்கிறது.
பசுவதை தடுப்பு சட்ட எதிர்ப்பு இயக்க பொறுப்பாளர் நரசிம்மய்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பசுவதை தடுப்பு சட்டத்தை கர்நாடக அரசு சட்டசபை, மேல்-சபைகளில் நிறைவேற்றி இருக்கிறது. இந்த சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக சென்று இருக்கிறது. இந்தநிலையில் மைசூரில் பா.ஜனதா கட்சி சார்பில் மாநாடு நடந்தது.
ஈசுவரப்பாவுக்கு கண்டனம்
இந்த மாநாட்டில் கட்சி தலைவர் ஈசுவரப்பா, பசுக்களை கொல்பவர்களின் கைகள் வெட்டப்படும் என்று ஆக்ரோஷமாக சொல்லி இருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. பசுக்களை கொல்லக்கூடாது என்ற சட்டம் சிறுபான்மை மக்களான முஸ்லீம்களுக்கு எதிரானது. அவர்களை குறிவைத்து தான் இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது.
பா.ஜனதா கட்சிக்கு பித்து பிடித்துவிட்டது. அதனால்தான் அவர்கள் இவ்வாறு எல்லாம் செயல்படுகிறார்கள். அவர்களால் ஆட்சியை சரியாக நடத்த முடியாது. இந்த சட்டத்தால் விவசாயிகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
24-ந்தேதி ஆர்ப்பாட்டம்
வயதான, நோய் கொண்ட மாடுகளை விவசாயிகள் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு ஓரளவுக்கு பணமும் கிடைக்கிறது. இந்த சட்டத்தை அமல்படுத்தினால் அந்த மாடுகளை யாரும் வாங்கமாட்டார்கள். இதை அரசு நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் ஈசுவரப்பாவை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் வருகிற 24-ந் தேதி பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள்.
இவ்வாறு நரசிம்மய்யா கூறினார்.