நெல்லை மாவட்டத்தில் செம்மறி ஆடு வளர்க்க ரூ.10 கோடி கடன்
நெல்லை, ஆக.20-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=588377&disdate=8/20/2010&advt=2
நெல்லை மாவட்டத்தில் செம்மறி ஆடு வளர்க்க ரூ.10 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என கலெக்டர் மு.ஜெயராமன் கூறினார்.
தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட இலவச மருத்துவ முகாம் பாளையங்கோட்டையை அடுத்த நொச்சிகுளத்தில் நேற்று நடந்தது. முகாமுக்கு கலெக்டர் மு.ஜெயராமன் தலைமை தாங்கினார். அவர், சிறந்த கன்று குட்டிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் கால்நடை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்துக்கு 31 ஆயிரம் செலவில் 276 இலவச கால்நடை முகாம்கள் நடைபெற உள்ளது. நொச்சிகுளத்தில் முதலாவது முகாம் தொடங்கப்பட்டு உள்ளது.
275 முகாம்கள்
மருத்துவ வசதியில்லாத 19 ஊராட்சி ஒன்றியங்களில் 275 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இம்முகாம்கள் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், செயற்கை கருவூட்டங்கள், குடற்புண் நீக்கம், சினை பரிசோதனைகள் போன்றவைகள் செய்யப்படுகிறது.
கால்நடைகளுக்கு தேவையான தீவன புற்களும் முகாம்களில் வழங்கப்பட உள்ளது. கால்நடை பராமரிப்பில் நவீன முறைகள் கையாளுவது குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு நடந்த 276 இலவச கால்நடை முகாம்களில் 34 ஆயிரத்து 688 விவசாயிகளின் 3 லட்சத்து 43 ஆயிரம் கால்நடைகளுக்கு ரூ.3 லட்சத்து 31 ஆயிரம் செலவில் பல்வேறு கிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளது.
கடந்த காலங்களில் கிராமங்களில் கால்நடைகளுக்கு பிரண்டை செடியுடன் உப்பும், காய்ந்த மிளகாயும் சேர்த்து கால்நடைகளின் நாக்குக்கு இடையில் வைத்து மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள். ஆனால், தற்போது கிராமங்களில் கால்நடை மருத்துவர்கள் மிக எளிதாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
குஜராத், உத்திரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் உள்ள கிராமங்களில் தலா ஒவ்வொரு வீட்டுக்கும் 2 கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. இந்த கால்நடைகள் கிராமப்புற முன்னேற்றத்துக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது.
ரூ.10 கோடி கடன்
நெல்லை மாவட்டத்தில் வருமானம் உள்ள தொழிலாகிய செம்மெறி ஆடுகள் வளர்ப்பதற்கு ரூ.10 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வங்கிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே, கிராமத்தில் உள்ள விவசாயிகள் இதுபோன்ற கால்நடை முகாம்களுக்கு சென்று சிகிச்சை அளித்து, கால்நடைகளை பேணி பாதுகாக்க வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கால்நடை மருத்துவர்கள் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.இவ்வாறு கலெக்டர் மு.ஜெயராமன் பேசினார்.
முகாமில் கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சிவானந்தம், துணை இயக்குனர் மணிவண்ணன், உதவி இயக்குனர் சங்கரசுப்பிரமணியன், பஞ்சாயத்து தலைவர் ஜெபராஜ், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் செல்லப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.