சென்னை ரெயிலில் அடிபட்டு யானை பலி
ஒரு மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
பாலக்காடு, ஆக.17-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=587740&disdate=8/17/2010&advt=2
கோவை அருகே சென்னை ரெயிலில் அடிபட்டு ஆண் யானை ஒன்று பலியானது. இதனால் ஒரு மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குட்டி யானை
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் பாலக்காடு சந்திப்புக்கு (ஒலவக்கோடு) இரவு 9 மணிக்கு வந்து சேர்ந்தது. அதன்பிறகு அங்கிருந்து சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் கோவைக்கு பி லைன் பாதையில் வந்து கொண்டு இருந்தது.
கோவை அருகே கேரள வனப்பகுதியான கஞ்சிக்கோட்டில் இருந்து 11/2 மைல் தொலைவில் சென்னை ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு குட்டி யானை மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதியது.
ரெயிலில் அடிபட்டு யானை பலி
ரெயிலில் அடிபட்ட குட்டி யானை தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டது. யானை பிளிறியபடியே அதே இடத்தில் துடிதுடித்து இறந்து போனது. யானை மீது ரெயில் மோதியதால் ரெயில் லேசாக குலுங்கியது. நல்லவேளை ரெயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரளவில்லை. என்ஜின் டிரைவர் சமயோஜிதமாக ரெயிலை நிறுத்தினார்.
பின்னர் ரெயில் என்ஜின் டிரைவர், கார்டு, மற்றும் ரெயில்வே அதிகாரிகள், பணியாளர்கள், ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்கள். யானை அடிபட்டு இறந்து கிடந்த இடத்திற்கு அவர்கள் விரைந்து சென்றனர். தண்டவாளத்தை ஒட்டி இறந்து கிடந்த யானையை ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள்.
ஒரு மணி நேரம் தாமதம்
இதனால் முக்கால் மணி நேரம் கழித்து சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையை நோக்கி புறப்பட்டு வந்தது. இந்த சம்பவத்தால் கோவையில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்தும் கோவைக்கும் வர வேண்டிய ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றன.
இறந்த கிடந்த யானை ஆண் குட்டி ஆகும். பிறந்து 3 வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் மாவட்ட வனப்பாதுகாவலர் பார்வையிட்ட பிறகு அந்த யானையை வனப்பகுதியில் வனஊழியர்கள் அடக்கம் செய்தனர்.