தெருவில் திரியும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை குடியாத்தம் நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம்
குடியாத்தம், ஆக.29-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=590577&disdate=8/29/2010&advt=2
தெருவில் திரியும் குரங்குகளை பிடிக்க குடியாத்தம் நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகரமன்ற கூட்டம்
குடியாத்தம் நகரமன்ற கூட்டம், அதன் தலைவர் எம்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் ஆர்.சுப்பிரமணியன், துணைத்தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன், பொறியாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை தங்களது வார்டுகளில் அதிக அளவு உள்ளதாலும் விரைந்து ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும், தெருவிளக்குகள் சரியாக எரிவது இல்லை என்றும், அடிப்படை வசதிகள் மெத்தனமாக நடைபெறுகிறது என்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் பேசினர். அதற்கு தலைவர், `ஆழ்துளை கிணறுகள் விரைந்து அமைக்கப்படும். தெருவிளக்குகளுக்கு தேவையான மின்சாதன பொருட்கள் வந்துள்ளது. இந்த பிரச்சினை இனி இருக்காது` என்று தெரிவித்தார்.
குரங்குகளை பிடிக்க தீர்மானம்
பொதுமக்களுக்கு இடைஞ்சலாக நகரில் திரியும் நாய், பன்றி, மாடு, குரங்குகளை பிடிக்கவும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகரமன்ற உறுப்பினர்கள் எம்.என்.பாஸ்கர், ஆட்டோ மோகன், கேசவன், ஆர்.கே.அன்பு, ஜெயக்குமார், ரவி, பிரகாஷ்சவுத்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.