மனிதர்களுக்கான மருந்து சோதனைக்கு இதுவரை 15 கோடி விலங்குகள் பலி
பதிவு செய்த நாள் : ஜூன் 12,2010,23:26 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17916
Dinamalar Online Edition
மனிதர்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகள், ஆபத்தானவையா இல்லையா என்பது குறித்து சோதனை நடத்த விலங்குகளே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையில், இதுவரை 15 கோடி விலங்குகள் ஆய்விற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
மனிதனின் பாரம்பரிய அமைப்பை ஆய்வு செய்வதற்கு வசதியாக இருப்பவை எலிகளே. இதனால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விலங்குகளில் 90 சதவீதம் எலிகளும், சுண்டெலிகளுமே பயன்படுத்தப்படுகின்றன. "கார்டியோவாஸ்குலர்' பரிசோதனைகளுக்கு ஏற்ற விலங்கு நாய். நரம்பு மற்றும் நடத்தை தொடர்பான ஆய்வுகளுக்கு, சிம்பன்சிகளும், குரங்குகளும் உதவுகின்றன. "பராமரிப்பதும், கையாள்வதும் எளிதாக இருப்பதால் எலிகளும், சுண்டெலிகளும் ஆய்வுக்கு பயன்படுத்தப்படுகின்றன. நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம், மன அழுத்தம், வலிப்பு நோய் உள்ளிட்ட காரணிகளை கட்டுப்படுத்துவது குறித்து, விலங்குகளிடம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விலங்குகளுக்கு பயன்படுத்தும் சோதனை, மனிதர்களுக்கு செய்யும் போது ஏன் தோல்வி அடைந்து விடுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. உடல் ரீதியாகவும், பாரம்பரிய ரீதியாகவும் குரங்குகளும், சிம்பன்சிகளும் மனிதனை போல உள்ளதால் ஆய்வுகளுக்கு இவை பொருத்தமானவை' என்று பெங்களூரு தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் நிறுவனத்தின் நரம்பு உடற்கூறுவியல் துறை தலைவர் ராஜு கூறுகிறார். "ஆய்வுகளுக்கு விலங்குகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன' என்று கூறியுள்ளார் ஸ்காட்லாந்து, எடின்பரோ பல்கலைக்கழக நரம்பு அறிவியல் மையத்தலைவர் மால்கம் மெக்லியோட்.
இந்த ஆய்வு குறித்து மால்கம் கூறுகையில்,"நரம்பு பாதுகாப்பு குறித்து, 500க்கும் மேற்பட்ட மருந்துகள் கண்டுபிடித்து அவற்றை விலங்குகளிடம் சோதனை செய்யும் போது நல்ல பலன் தெரிகிறது. ஆனால், மனிதர்களுக்கு கொடுத்து சோதிக்கும் போது தோல்வியடைந்து விடுகிறது. சோதனைக்கு பெண் மற்றும் வயதான விலங்குகள் பயன்படுத்தப்படுவதில்லை. ஆண் மற்றும் குட்டி விலங்குகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன' என்கிறார். மனிதர்கள் அடிக்கடி உடல் நல பாதிப்பு அடைவது போல் விலங்குகள் இயற்கையாக பாதிக்கப்படுவதில்லை. அவற்றிற்கு செயற்கையாகவே பாதிப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. உடல் உறுப்புகளில் அதிக வித்தியாசமுள்ளதால் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கு இடையே ஏற்படும் பாதிப்புகளை கணிப்பது கடினமாக உள்ளது. இதனால் ஆய்வின் போது தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளன. "பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து கொடுத்து சோதிக்கும் போது, குணமடைவதற்கு நீண்ட காலம் ஆகிறது. இதனால் நோயாளியின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்வதில் மிக தாமதம் ஏற்படுகிறது.
பர்கின்சன் நோய் குறித்து, விலங்குகளிடம் ஆய்வு செய்யும் போது விரைவில் அவற்றின் உடல் உறுப்புகளில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இவ்வாறு முரண்பாடுகள் ஏற்படும் போது முடிவு தெரிவதில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. விலங்குகளுக்கு பரிசோதிக்கப்பட்ட 92 சதவீத மருந்துகள், மனிதர்களுக்கு அளித்து செய்யும் ஆய்வு வெற்றி பெறுகின்றன என்று, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கூறுகிறது. "கடந்த 1985ம் ஆண்டில், இது 86 சதவீதமாக இருந்தது தற்போது அதிகரித்துள்ளது. விலங்குகளை கொண்டு சோதனை செய்யும் போது, 8 சதவீத அளவு கண்டுபிடிக்க முடியாததால், கடும் பாதிப்போ அல்லது உயிரிழப்போ ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது' என்று மூத்த மருத்துவ மற்றும் ஆய்வு ஆலோசகர் ஜான் பிபின் கூறுகிறார். பல்வேறு நோய்களுக்கு, மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் 15 கோடி விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுகளில் தவறான முடிவுகள் வரும் போது, விலங்குகளை ஆய்வுகளுக்கு பயன்படுத்த கூடாது என்று, விலங்குகள் பாதுகாப்பு குழுக்களிடமிருந்து எதிர்ப்புகள் எழுகின்றன. புதியதாக கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்வதற்கு முன்பாக, மனிதர்கள் அல்லாத உயிரினங்களிடம் சோதனை நடத்தப்பட வேண்டியது மிக அவசியமென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"கோடிக்கணக்கான விலங்குகளை பயன்படுத்தி ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு உள்ளதால், எதிர்காலத்தில் கம்ப்யூட்டரில் மாதிரிகளை தயாரித்து அதன் மூலமும், திசு வளர்ப்பு மூலமும் ஆய்வுகள் செய்யலாம். அரிய விலங்குகளை தவிர, மற்றவற்றை ஆய்வுகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது' என்று மெக்லியட் தெரிவிக்கிறார்.