விலங்குகளை பாதுகாக்க புதிய சட்டம் : மத்திய அரசு அறிவிப்பு
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010,23:44 IST
Dinamalar E Paper
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=63079
புதுடில்லி : "விலங்குகளை பாதுகாப்பதற்கென பிரத்யேகமாக ஒரு புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். விலங்குகளை கொடுமைப் படுத்துவோருக்கு, தற்போதுள்ள சட்டத்தில் மிக குறைந்த தண்டனையே வழங்க முடியும். புதிய சட்டத்தில் தண்டனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என, மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: "விலங்குகளை கொடுமைப்படுத்துவோரை தண்டிக்க, தற்போதுள்ள சட்டத்தில் கடுமையான தண்டனை எதுவும் இல்லை'என, விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன். விலங்குகளை கொடுமைப் படுத்துவோருக்கு, தற்போது 50 ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்த அபராதம் போதுமானது அல்ல. அபராதத்தை அதிகரிக்கும் வகையிலும், விலங்குகளை பாதுகாக்கும் வகையிலும் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இதற்கான முயற்சிகள் ஏற்கனவே துவக்கப்பட்டுள்ளன.
பண்டிகை காலங்களில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் விலங்குகள் பலி கொடுக்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. சில மாநிலங்களில் இதற்கு தடை விதித்திருந்தாலும், வேறு சில மாநிலங்களில் இந்த நடைமுறை தொடர்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு இதுகுறித்து அறிவுறுத்துவதற்காக, மத்திய அரசு சார்பில் ஆலோசனைக் குழு அனுப்பி வைக்கப்படும். மேலும் சில மாநிலங்களில், திருவிழாக் காலங்களில் யானைகள் வர்த்தக நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுவதும் கவலை அளிக்கிறது.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.