பசுவை லாரியில் ஏற்றி சித்ரவதை: கொம்பு உடைந்து ரத்தம் கொட்டிய பரிதாபம்
ஏப்ரல் 15,2010,00:00 IST
Dinamalar Daily Pondichery Editionபண்ருட்டி : லாரியில் இருந்து கீழே விழுந்த பசுவை, மீண்டும் கயிறு கட்டி ஏற்றியபோது கொம்பு உடைந்து ரத்தம் கொட்டியது. பசுவை சித்ரவதை செய்து லாரியில் ஏற்றியதால் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. புதுச்சேரியிலிருந்து நாகர்கோவிலுக்கு, 25 பசுக்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டி மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியில் இருந்த பசு ஒன்று கீழே விழுந்தது. பலத்த காயமடைந்த பசுவை கயிறு கட்டி மீண்டும் லாரியில் ஏற்றினர். இதனால் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, கடலூர் - சித்தூர் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்தது.
அந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், பசுக்களை ஏற்றி வந்தவர்கள் போக்குவரத்தைப் பற்றி கவலைப்படாமல், பசுவை சித்ரவதை செய்து, கயிறு மூலம் கட்டி லாரியில் ஏற்றுவதிலேயே குறியாக இருந்தனர். அப்போது பசுவின் கொம்பு உடைந்து ரத்தம் கொட்டியது. லாரி வாடகையை கருதி, மாடு வாங்கி விற்பவர்கள் ஒவ்வொரு லாரிகளிலும் அளவுக்கு அதிகமான மாடுகளை ஏற்றிச் செல்கின்றனர். அதிக மாடுகளை வதைத்து ஏற்றி செல்வதை தடுக்க, போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.