பங்களாபுதூர், டிச. 1-
http://dailythanthi.com/article.asp?NewsID=610841&disdate=12/1/2010&advt=2
குண்டேரிப்பள்ளம் அணை வனப்பகுதியில் மான் வேட்டையாட வந்த விவசாயி ஒருவர் நாட்டு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.
வனத்துறையினர் ரோந்துப்பணி
கோபி தாலுகா தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகர் தங்கப்பழம், வனக்காப்பாளர் கள் செந்தில்குமார், கோவிந்தன் மற்றும் வனத்துறையினர் குண்டேரிப்பள்ளம் அணை வனப்பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் குண்டேரிப்பள்ளம் அருகே உள்ள வினோபா நகர் பகுதியில் ரோந்து சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது, வினோபா நகரில் இருந்து விலாங்கோம்பை கிராமத்துக்கு செல்லும் வழியில் வனப்பகுதியில் தீப்பற்றி எரிவது போல் வெளிச்சம் தெரிந்தது. அதையடுத்து வனத்துறையினர் அந்த இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு தீ வெளிச்சத்தில் ஒருவர் துப்பாக்கியுடன் நின்று கொண்டு இருந்தார்.
துப்பாக்கியுடன் விவசாயி கைது
வனத்துறை அதிகாரிகளை கண்டதும் அந்த நபர் துப்பாக்கியுடன் தப்பி ஒட முயன்றார். இதனால், சந்தேகம் அடைந்த வனத்துறை அதிகாரிகள் அந்த நபரை விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில், அந்த நபர் வினோபா நகரை சேர்ந்த ரங்கசாமி (வயது 45) என்பதும், விவசாய கூலித்தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் வனப்பகுதியில் இரவு நேரத்தில் மான்களை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கியுடன் வந்ததும், துப்பாக்கிக்கு தோட்டா போடுவதற்காக தீ மூட்டிய போது சிக்கிக் கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் ரங்கசாமியை கைது செய்தனர்.
மேலும், வேட்டையாடுவதற்காக ரங்கசாமி கொண்டு வந்த நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.