நாய் வளர்ப்போர் சங்கம் சார்பில் சென்னையில் இன்று, 100-வது நாய் கண்காட்சி இறுதி நாளில் 750 நாய்கள் பங்கேற்கின்றன
சென்னை, டிச.10-
http://dailythanthi.com/article.asp?NewsID=612870&disdate=12/10/2010&advt=2
சென்னை நாய் வளர்ப்போர் சங்கம் சார்பில் 100-வது நாய் கண்காட்சி சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
இதுதொடர்பாக சென்னை நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் சுதர்சன் கூறியதாவது:-
100-வது நாய் கண்காட்சி
சென்னை நாய் வளர்ப்போர் சங்கம் 1976-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 34 ஆண்டுகளில் 99 நாய் கண்காட்சிகளை நடத்தியுள்ளோம். வெற்றிகரமாக 100-வது நாய் கண்காட்சி, சென்னை சேத்துப்பட்டில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இந்த கண்காட்சி இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 5.30 மணி வரை கண்காட்சி நடைபெறும்.
இந்த கண்காட்சியில், பல்வேறு வகைகளை சேர்ந்த உள்நாட்டு நாய்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு நாய்களும் பங்கேற்கின்றன. இதே மைதானத்தில் இரண்டு சர்வதேச நாய் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. மொத்தம் 65 வகைகளை சேர்ந்த 750 நாய்கள் பங்கேற்கும் இந்த கண்காட்சியில், சில அரிய வகை நாய்களும் இடம்பெறும்.
வேட்டை நாய்கள்
பிரேசில், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு வகையான நாய்கள் கலந்து கொள்கின்றன. டாபர்மேன், கிரேட் டேன்ஸ், லேப்ராடர் நாய்கள், ராஜபாளையம் நாய்கள், போலீஸ் துறையில் உள்ள நாய்கள் மட்டுமல்லாமல் மராட்டிய மாநிலம், பிஜாப்பூரில் இருந்து தனியாக பஸ் பிடித்து 30 வேட்டை நாய்களும் கொண்டு வரப்படுகின்றன. சர்வதேச நடுவர்கள் குழு, சிறந்த நாயை தேர்வு செய்யும். அந்த நாயின் உரிமையாளருக்கு சுழற்கோப்பை வழங்கப்படும்.
செல்லப்பிராணிகளுக்காக...
இந்த 100-வது கண்காட்சியின் நினைவாக, நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு தனியாக தகனமேடை அமைப்பதற்காக நன்கொடை வசூலிக்க திட்டமிட்டு உள்ளோம். செல்லப்பிராணிகளை உரிய மரியாதையோடு அதற்கான இடத்தில் தகனம் செய்ய விரும்புபவர்கள் நன்கொடை கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.