பழனி அருகே ஆயக்குடியில் தாயை பிரிந்து வந்த மிளா மான் குட்டி
பழனி, டிச.11-
பழனி அருகே ஆயக்குடியில் தாயைப் பிரிந்து வந்த மிளா மான் குட்டி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மிளா மான் குட்டி
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி சட்டப்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் மான் விழுந்தான் ஓடை என்ற ஓடை செல்கிறது. மழைக்காலம் என்பதால் ஓடையில் தற்போது தண்ணீர் செல்கிறது.
இந்த ஓடை அருகில் பழைய ஆயக்குடியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவரது தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் காட்டு யானைகள், பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை காக்கும் வகையில் சோலார் வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தோட்டத்தின் வேலிப் பகுதியில் உள்ள புதர்களை அப்புறப்படுத்தும் பணியில் நேற்று தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது மான் விழுந்தான் ஓடையில் உள்ள புதரில் பிறந்து சில மாதங்களே ஆன மிளா மான் குட்டி ஒன்று நடுங்கியபடி நின்று கொண்டு இருப்பதைக் கண்டனர். அந்த மான் குட்டி தாயைப் பிரிந்து வந்து தனியாக நின்று கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் அந்த மான் குட்டியை பத்திரமாக மீட்டு தோட்டத்திற்கு கொண்டு வந் தனர். மேலும் இது குறித்து ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
ஒப்படைப்பு
ஒட்டன்சத்திரம் வனச்சரகர் சேதுராமன் அறிவுரையின் பேரில் வனக் காப்பாளர் மரிய ஜோசப் செல்வராஜ், வனக்காவலர் கணேசன் மற்றும் வனத்துறையினர் தோட்டத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் மான் குட்டியை விவசாயிகள் ஒப்படைத்தனர். இதன்பிறகு வனத்துறையினர் மான் குட்டியை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.